காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 400 பேர் பலி

🕔 October 23, 2023

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆகக்குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை அல்-ஷிஃபா மற்றும் அல்-குத்ஸ் வைத்தியசாலைகளுக்கு அருகாமையிலும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன் ஊடக நிறுவனமான வஃபா தெரிவித்துள்ளது.

அல்-குட்ஸ் வைததியசாலை “எந்த நேரத்திலும்” குண்டுவெடிப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளலாம் என, அல் ஜசீராவிடம் ஏற்கனவே பாலஸ்தீன் செம்பிறை சங்கத்தின் ஊடகப் பணிப்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது, இஸ்ரேலுக்கான தங்கள் ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதுடன், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை பின்பற்றி பொதுமக்களைப் பாதுகாக்க அந்நாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மத்திய கிழக்கு முழுவதும் மோதல்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வரும் நிலையில், தமது துருப்புக்கள் குறிவைக்கப்பட்டால், பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 4,651 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் ஒக்டோபர் 7 முதல் இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்