ஹாபிஸ் நசீர் இடத்துக்கு அலிசாஹிர் மௌலானா: நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

🕔 October 17, 2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக – செய்யத் அலிசாஹிர் மௌலானா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று காலை (17) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் – நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, அலிசாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, அதிக விருப்பு வாக்குகளுடன் வெற்றிபெற்ற ஹாபிஸ் நசீர் அஹமட், கட்சியின் தீர்மானத்துக்கு மாறாக நடந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டில், கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனையடுத்து தன்னை கட்சியிலிருந்து நீக்கியமையை செல்லுபடியற்றதாக்கக் கோரி, உச்ச நீதிமன்றில் ஹாபிஸ் நசீர் அஹமட் வழக்குத் தொடர்ந்தார். ஆயினும், கட்சியிலிருந்து ஹாபிஸ் நசீர் நீக்கப்பட்டமை சட்டப்படி சரியானது என, உச்ச நீதிமன்றம் கடந்த 06ஆம் திகதி தீர்ப்பளித்தது.

நபரொருவர் எந்தக் கட்சி அல்லது சுயேட்சைக் குழு வழியாக நாடாளுமன்ற உறுப்பினரானாரோ, அந்தக் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவின் அங்கத்துவத்தை அவர் இழப்பாராயின், அவர் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையினையும் இழப்பார்.

இந்தப் பின்னணயில், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு, ஹாபிஸ் நசீர் அஹமட்-க்கு அடுத்து, அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்ற அலிசாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

தொடர்பான செய்தி: மு.காங்கிரஸிலிரிருந்து ஹாபிஸ் நசீர் நீக்கப்பட்டமை செல்லுபடியாகும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: எம்.பி பதவியும் பறிபோகிறது

Comments