மு.கா.வின் முட்டைகள்

🕔 January 28, 2016

Article - 65 - 001
மு
ஸ்லிம் காங்கிரஸ் நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் ‘குஞ்சு’ எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. ஆயினும், அடைகாக்கும் காலம் அலுப்பூட்டும் வகையில் நீண்டு சென்றதால், ‘குஞ்சு’ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை கணிசமானோரிடம் உருவாகத் துவங்கியது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், மு.காங்கிரசின் தேசியப்பபட்டியல் முட்டைகளில் ஒன்று ‘குஞ்சு’ பொரித்திருக்கிறது. எம்.எஸ். தௌபீக் முட்டைக்குள்ளிள்ளிருந்து சத்தமில்லாமல் வெளியே வந்திருக்கிறார்.

முட்டைகளின் கதை

முஸ்லிம் காங்கிரசும் – ஐக்கிய தேசியக்கட்சியும் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, ஐ.தே.கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இரண்டினை, அந்தக் கட்சி மு.காங்கிரசுக்குக் கொடுத்தது.

தேசியப்பட்டியல்களைப் பெற்றுக்கொண்டதும் மு.கா. தலைவருக்கு ஆரம்பித்தது தலைவலி. கிட்டத்தட்ட மு.காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் ஒவ்வொரு பிரதேசமும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமக்கே வழங்க வேண்டும் என்று குரலெழுப்பத் துவங்கின. இன்னொருபுறம் கட்சியின் உயர் பதவிகளை வகிக்கும் சிலரும் தேசியப்பட்டியலுக்காக முட்டிமோதத் தொடங்கினர்.

இவ்வாறானதொரு நிலையில், உடனடியாக தேசியப்பட்டியலை யாருக்குக் கொடுத்தாலும் பிரச்சினை வெடிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், விடயத்தை ஆறப்போட்டு முடிவு காண நினைத்தார். அதுவரை, மேற்படி இரண்டு தேசியப்பட்டியல்களுக்கும் தற்காலிகமாக, நம்பிக்கைப் பொறுப்பின் அடிப்படையில் தனது மூத்த சகோதரரான டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் மற்றும் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் ஆகியோரை மு.கா. தலைவர் நியமித்தார் என்பதெல்லாம், எல்லோரும் அறிந்த பழைய கதையாகும்.

விமர்சனங்கள்

ரஊப் ஹக்கீம் தைரியமற்றவர், உறுதியான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர், அதனால்தான் தமது கட்சிக்குக் கிடைத்த தேசியப்பட்டியலுக்குப் பொருத்தமான நபர்களை உடனடியாக நியமிக்காமல் இத்தனை காலமும் இழுத்தடிக்கின்றார் என்கிற விமர்சனம் மு.கா. தலைவர் மீது வைக்கப்படுகிறது.

மு.கா. தலைவரின் பலம் – அவரின் பொறுமைதான். சிலவேளைகளில் அவரின் பலவீனமும் அதுவாகத்தான் உள்ளது. அரசியலில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் எடுத்த அதிரடி முடிவுகளை விடவும், மிக நீண்ட அலுப்பூட்டும் பொறுமையின் பின்னர் எடுத்த முடிவுகள்தான் அதிகமாகும்.

ஆனால், மேற்படி தேசியப்பட்டியல் விவகாரத்தில் ஹக்கீம் காத்து வந்த நீண்ட பொறுமையானது, அரசியல் சாதுரியம் மிகுந்ததாகும். தேசியப்பட்டியல் விவகாரத்தில் தான் எடுக்கப்போகும் முடிவுகளுக்கு ஏற்றவாறு கள நிலைமைகளை மாற்றிக் கொள்வதற்காகவே, அதனை இவ்வளவு காலமும் அவர் இழுத்தடித்து வந்தார் என்பதை, அவரின் நடத்தைகளை ஊடறுத்துப் பார்க்கின்றவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

இழுத்தடிப்பு

மு.கா.வுக்குக் கிடைத்த தேசியப்பட்டியல்களுக்கான நபர்களை உடனடியாக நியமித்திருந்தால், கடுமையான பிரச்சினைகளை மு.கா. தலைவர் எதிர்கொண்டிருப்பார் என்பதை மேலே கூறியிருந்தோம்.

குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேசம் தேசியப்பட்டியலைக் குறிவைத்துக் காத்திருந்தது. அந்த ஊருக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டும் என்பதற்கு ஏராளமான நியாயங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போது அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் சார்பாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், அந்தக் கட்சிக்குக் கிடைத்திருக்கின்ற தேசியப்பட்டியல் நியமனத்தினையும் அம்பாறை மாவட்டத்துக்குள்ளேயே முடக்கி விடுவதென்பது கட்சியின் பார்வையில் சரியான முடிவாக அமையாது.

எனவே, தேசியப்பட்டியல் விவகாரத்துக்கு முடிவு காணும் முன்னர், அது தொடர்பில் எழுக்கூடிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென மு.கா. தலைவர் எண்ணினார். அதற்காக அவருக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. அதுவரை, தேசியப்பட்டியல் விவகாரத்தில் பொறுமை காப்பதுதான் புத்திசாதுரியமாகவும் அவருக்குப்பட்டிருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு அலுப்படிக்கும் வரை பொறுமை காப்பதில்தான் மு.கா. தலைவர் மன்னர் அல்லவா. அதனால், தேசியப்பட்டியல் விவகாரத்தினை, அவர் திட்டமிட்டே இழுத்தடிக்கத் துவங்கினார்.

இந்தக் கால கட்டத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.ஐ.எம். மன்சூர், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதால், அவர் வகித்த அமைச்சுப் பதவி வெற்றிடமாக இருந்தது. எனவே, தேசியப்பட்டியலை உரத்த குரலில் கோரி நின்ற அட்டாளைச்சேனைப் பிரதேசத்தை, ஏதோ ஒருவகையில் திருப்திப்படுத்தும் பொருட்டு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரை மு.கா. தலைவர் நியமித்தார்.

அடுத்து, தேசியப்பட்டியல் விவகாரத்தில் மு.கா. தலைவருக்கு தலைவலியாக இருந்தவர் அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி. ஏற்கனவே, இரண்டு தடவை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஹசனலி பெற்றிருந்தார். அந்தக் காலப்பகுதியில் பிரதியமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகளையும் ஹசனலி வகித்தார். இந்த நிலையில், மூன்றாவது முறையாகவும் தன்னை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு மு.காங்கிரஸ் தலைவரை ஹசனலி நெருக்குவாரப்படுத்தி வந்தார்.

மு.கா. செயலாளர் ஹசனலி – அம்பாறை மாவட்டம் நிந்தவூரைச் சேர்ந்தவர். ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மு.கா. சார்பாக உள்ளனர். அந்த மூவரில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் – ஹசனலியின் சொந்த ஊரான நிந்தவூரைச் சேர்ந்தவர். போதாக்குறைக்கு பிரதியமைச்சராகவும் பைசல் காசிம் பதவி வகிக்கின்றார். இவ்வாறானதொரு நிலையில், ஹசலியை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மு.கா. தலைவர் நியமிப்பதென்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயற்பாடாகவே அமையும்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு தகுதியான அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களுக்கு அந்தப் பதவியினை வழங்காமல், அதனைக் கொண்டு சென்று, ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒரு பிரதியமைச்சர் உள்ள ஊரைச் சேர்ந்த ஹசனலிக்குக் கொடுத்தால், அந்த செயற்பாட்டினை அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்கள் ‘சும்மா’ பார்த்துக் கொண்டிருக்க மாட்டாது. எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் அதற்கான எதிர் விளைவுகளை குறித்த பிரதேசங்களில் மு.காங்கிரஸ் சந்திக்க நேரிடும்.

இன்னொருபுறம், இரண்டு தடவை செயலாளர் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நியமனங்களை வழங்கியமை தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீது, அந்தக் கட்சிக்குள்ளேயே பாரிய விமர்சனங்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்த மு.கா. தலைவர், தனது கட்சியின் செயலாளர் ஹசனலிக்கு இம்முறை தேசியப்பட்டியல் நியமனம் வழங்குவதில்லை என்கிற முடிவுக்கு வந்தார். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருந்தது. மு.காங்கிரசின் செயலாளர் என்கிற வகையில், அந்தக் கட்சியினுடைய நடவடிக்கைகளில் கணிசமானவற்றினை ஹசனலிதான் கையாண்டு வந்தார். மேலும், தேர்தல் ஆணையாளருடனும் கட்சியின் செயலாளராக ஹசனலிதான் உத்தியோகபூர்வ தொடர்புகளைப் பேணினார். இவ்வறானதொரு நிலையில், ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்காமல் விட்டால், அவர் மு.கா. தலைவர் ஹக்கீமுடன் முரண்டு பிடித்து, முட்டி மோதத் தொடங்கலாம் என்கிற அபிப்பிராயங்கள் இருந்தன. அப்போது, கட்சியின் செயலாளர் என்கிற தனது அஸ்திரத்தினை ஹசனலி கையில் எடுத்து, ஹக்கீமுக்கு எதிராகச் சுழற்றத் துவங்குவார் என்கிற பேச்சுக்களும் எழத் துவங்கின. ஹசனலி தெரிவித்ததாக ஊடகங்களில் வெளிவந்த சில செய்திகள், அவர் மீதான மேற்படி சந்தேகங்களுக்கு உரமூட்டும் வகையில் அமைந்தன.

அனைத்தையும் மிக அவதானமாக ஹக்கீம் கவனித்தார். ஹசனலி தொடர்பில் எச்சரிக்கையானார்.

இதனையடுத்து, மு.காங்கிரசின் கடந்த பேராளர் மாநாட்டில் ‘உயர்பீடக் கூட்டங்களுக்கான செயலாளர்’ என்கிற புதிய பதவியொன்று உருவாக்கப்பட்டது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பிரதிப் பதிவாளர் மன்சூர் ஏ. காதர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். செயலாளர் ஹசனலியிடம் இருந்த அதிகபட்ச அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு, புதிய செயலாளருக்கு வழங்கப்பட்டன. இதேவேளை, உயர்பீட கூட்டங்களுக்கான செயலாளர் பதவியை வகிக்கின்ற நபரும், நேரடி அரசியலில் ஈடுபட முடியாதவாறு கட்சி யாப்பில் சரத்துக்கள் சேர்க்கப்பட்டன. மு.கா.வின் செயலாளர் ஹசனலி, பல் பிடுங்கிய பாம்பானார்.

இவை அனைத்தும் நடந்து முடிந்த பிறகுதான், மு.காங்கிரசின் தற்காலிக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், தனது பதவியை கடந்த செவ்வாய்கிழமையன்று ராஜிநாமா செய்தார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருகோணமலையைச் சேர்ந்த சின்ன தௌபீக் அல்லது எம்.எஸ். தௌபீக் என அறியப்படும் முஹம்மது சரீப் தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார் என்று, கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி மூலமாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நியாயம்

முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவுள்ள பிராந்தியங்களில் திருகோணமலை மாவட்டம் முக்கியமானது. கடந்த காலங்களில் இந்த மாவட்டம் சார்பாக முஸ்லிம் காங்கிரசுக்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருந்து வந்துள்ளது.

இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் மு.காங்கிரஸானது திருகோணமலை மாவட்டத்தில் யானைச் சின்னம் சார்பாகப் போட்டியிட்டது. கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும், உள்நாட்டு போக்குவரத்து பிரதியமைச்சராகவும் பதவி வகித்த எம்.எஸ். தௌபீக், அந்தத் தேர்தலில் மு.காங்கிரஸின் அபேட்சகராக இம்முறை களமிறங்கினார். இந்த நிலையில் 26 ஆயிரத்து 515 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட போதும், தௌபீக் தோல்வியடைந்தார்.

மு.காங்கிசுக்கு ஆதரவுள்ள ஒரு மாவட்டத்தில், அதுவும் ஒரு பிரதியமைச்சராகப் பதவி வகித்தமையினைத் தொடர்ந்து களமிறங்கிய தேர்தலில், எம்.எஸ். தௌபீக் தோல்வியடைந்தமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்தன. தௌபீக் தனது பதவிக் காலத்தில் பொதுமக்களுடன் நடந்து கொண்ட முறை, பிரதியமைச்சுப் பதவியினை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் அவரின் சகோதரர்கள் தௌபீக்கின் அரசியலுக்குள் மூக்கு நுழைத்தமையினால் பொதுமக்களிடத்தில் ஏற்பட்ட அதிருப்தி உள்ளிட்ட பல விடயங்கள், எம்.எஸ். தௌபீக்கின் தோல்விக்குக் காரணமாக அமைந்ததாக, முஸ்லிம் காங்கிரஸ்காரர்களே குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில், ‘மு.காங்கிரசுக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை, முஸ்லிம் காங்கிரசுக்கு கணிசமான ஆதரவு இருந்தும், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை இழந்துள்ள பிரதேசங்களுக்கு வழங்க வேண்டும்’ என்கிற தீர்மானத்தினை மு.கா. தலைவர் எடுத்துள்ளார். மு.காங்கிரசுக்கு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாத பகுதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில்தான், தனது ராஜிநாமா அமைந்துள்ளதாக, டொக்டர் ஹபீஸ் கூறியிருந்தமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது. தனது சகோதரரும் மு.கா. தலைவருமான ரஊப் ஹக்கீமுடைய மனவோட்டத்தினைப் புரிந்து கொள்ளாமல், டொக்டர் ஹபீஸ் அப்படிக் கூறியிருக்க மாட்டார். அந்தவகையில், நாடாளுமன்றப் பிரதிதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்குத்தான் தேசியப்பட்டியல் நியமனம் என்பது, மு.கா. தலைவர் ஏற்கனவே முடிவு செய்த விடயம்போல்தான் தெரிகிறது.

இவ்வாறானதொரு முடிவின் பிரகாரம்தான் மு.கா.வின் தேசியப்பட்டியல் திருகோணமலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவில் நியாயம் இருப்பதையும் மறுக்க முடியாது. ஆனால், பிரதியமைச்சராக இருந்த நிலையிலும், மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியாமல், நாடாளுமன்றத் தேர்தலில் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்த இம்ரான் மஹ்றூப் என்கிற இளைஞனிடம் தோற்றுப் போன எம்.எஸ். தௌபீக் என்பவர், மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் பொருத்தமானவர்தானா என்கிற கேள்விகள் கட்சிக்குள்ளேயே உள்ளன.

இருந்தபோதும், புதியவர் ஒருவரைத் தேடிப்பிடித்து அவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பதிவியை ஒப்படைப்பதென்பதும், அவர் மூலமாக திருகோணமலை மாவட்டத்தில் கட்சியை வளர்ப்பதென்பதும் இப்போதைக்குச் சாத்தியமில்லை. அதனால்தான், ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிவகித்த ஒருவருக்கு தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்கின்றனர் முஸ்லிம் காங்கிரசின் மற்றொரு தரப்பினர்.

சுழற்றி முறை

நாடாளுமன்றப் பிரதிதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்குத்தான் மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படும் என்கிற முடிவில் அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் உறுதியாக இருப்பாராயின், அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைக்கப் போவதில்லை. அதற்கான சாத்தியம் மிகக்குறைவாகவே தெரிகிறது.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரசுக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை சுழற்சி முறையில் வழங்குவதற்கானதொரு திட்டமும் அந்தக் கட்சியின் தலைவரிடம் உள்ளதாகப் பேசப்படுகிறது. அதற்கிணங்க, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காலத்தினையும் இண்டாக உடைத்து, தலா இருவரை நியமிப்பதுதான் அந்தச் சுழற்சி முறைத் திட்டமாக அமையும் என்றும் கூறுப்படுகிறது. அப்படிப்பார்த்தால், இரண்டு தேசியப்பட்டியல் நியமனங்களினூடாகவும் நான்கு பேர் நாடாளுமன்ற உறுப்பினராகும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

ஆனால், சுழற்சி முறையின்படி முதல் சுற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொள்கின்றவர்கள், அதனை உரிய காலத்தில் ராஜிநாமாச் செய்து, இரண்டாமவருக்குக் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரசுக்குள் அவ்வாறான நம்பிக்கைப் பொறுப்பினை சிலர் நிறைவேற்றிக் காட்டியிருக்கின்றனர். அதற்கு அண்மைக்கால உதாரணம் அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் டொக்டர் ஹபீஸ் ஆவார். ஆனால், எல்லோரும் ஹபீஸாக இருக்க மாட்டார்கள். நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்டு, மாற்றுத் தரப்புக்கு ஓடிய ஹுசைன் பைலாவும் மு.காங்கிரசுக்குள் இருந்தவர்தான் என்பதும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

மு.காங்கிரசின் இரண்டு தேசியப்பட்டியல் பதவிகளையும் மு.கா. தலைவர் ஒரே தடவையில் ஏன் உரியவர்களுக்குக் கொடுக்கவில்லை என்கிறதொரு கேள்வியும் உள்ளது. இதற்கான பதில் மிக இலகுவானது. மு.கா. தலைவர் முதல் கல்லை எறிந்து பார்த்திருக்கின்றார். அதற்கான எதிர்வினைகள் மற்றும் தாக்கங்கள் எவ்வாறானவை என்பதை அவர் இப்போது கூர்ந்து அவதானிக்கக் கூடும். முதல் கல்லுக்கு எழுந்த எதிர்வினைகள் இரண்டாவது கல்லுக்கு எழாமல் இருப்பதற்கான அரசியல் சூழ்நிலைகளை உருவாக்கி விட்டு, இரண்டாவது கல்லை எறியத் துவங்குவார் என்பது பலரின் எதிர்பார்ப்பாகும்.

அப்போது, இரண்டாவது முட்டை குஞ்சு பொரிக்கும். அந்தக் குஞ்சு பற்றிய அனுமானமொன்று நம்மிடம் உள்ளது.

இன்னொரு கட்டுரையில் அதுபற்றிப் பேசுவோம்.

நன்றி: ‘தமிழ் மிரர்’ பத்திரிகை (26 ஜனவரி 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்