அமைச்சர் நசீருக்கான நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், மொட்டில் இருந்து பிரிந்தவர்களுக்கு முடிவெடுக்கப்படும்: சாகல காரியவசம்

🕔 October 7, 2023

மைச்சர் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படியாகக் கொண்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள அந்த கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு தொடர்பாக தற்போது அவதானம் செலுத்துவதாக – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகல காரியவசம் குறிப்பிட்டார்.

2022ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்திருந்தது.

எனினும் அந்த தீர்மானத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட், வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இதனையடுத்து அவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் இதற்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்ட ரீதியானது என ப்ரீத்தி பத்மன் சூரசேன, எஸ்.துரைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர் குழாம் நேற்று (06) தீர்ப்பளித்திருந்தது.

இந்தநிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் நிலவும் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு விருப்பு வாக்குகள் பட்டியலில் அடுத்தாக உள்ள அலி சாஹீர் மௌலான தெரிவு செய்யப்படுவார்.

இந்த விடயத்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் நாடாளுமன்ற செயலாளருக்கும் கடிதம் ஒன்றின் ஊடாக முஸ்லிம் காங்கிரஸ் அறியப்படுத்தியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 17ம் திகதி இது தொடர்பான அறிவிப்பு நாடாளுமன்றில் வெளியிடப்படும்.

இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தப்படும்.

பின்னர் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்