நிந்தவூர் பகுதியில் திருட்டுப்போன மோட்டார் சைக்கிள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

🕔 October 5, 2023

– பாறுக் ஷிஹான் –

ம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள் களவுபோனதாக முறைப்பாடுகள் பதிவாகியிருந்த நிலையில், அந்த திருட்டுடன் தொடர்புபட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடமிருந்து 04 மோட்டார் சைக்கிள்களும் நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளன.

நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில்  அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில் – இவை தொடர்பான முறைப்பாடுகள் நிந்தவூர் பொலிஸ்  நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகளுக்கமைய   நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீம் தலைமையிலான குழுவினர் – விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நிந்தவூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும்  நால்வர் கைது நேற்று (04) செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிறைந்துரைச்சேனை பகுதியை சேர்ந்த  நால்வரே இவ்வாறு கைதாகினர். இவர்களிடருந்து  திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்  23,25,26 மற்றும் 46 வயது மதிக்கத்தக்கவர்களாவர். சந்தேச நபர்களில் ஒருவர் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பிரித்து உதிரிப்பாகங்களை விற்பனை செய்பவர் என்பதும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு போலி இலக்க தகடு பொருத்தப்பட்டு பாவிக்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Comments