அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் தொடர்புபட்டதாகக் கூறப்படும் ஊடகவியலாளரை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

🕔 September 26, 2023

விசாவளை – தல்துவ பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், இலங்கையில் உள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு மூளையாக செயல்பட்ட – துபாயில் இருந்து செயல்படும் பிரபல குற்றவாளியான ‘மன்னா ரமேஷுக்கு’ மேற்படி ஊடகவியலாளர் ரகசிய தகவலை வழங்கியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான ஊடகவியலாளரரை நேற்றிரவு மீகொட பிரதேசத்தில் வைத்து – பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற காலப்பகுதியில், குறித்த ஊடகவியலாளர் – கையடக்கத் தொலைபேசி ஊடாக பிரபல குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது. அந்த வகையில் இரண்டு தரப்பினரும் 18 தடவை தொலைபேசியில் கதைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

‘மன்னா ரமேஷ்’ என்பவர் ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பல தடவைகள் பணத்தை வைப்பிலிட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அடைக்கலம் வழங்கியவர் மற்றும் ஊடகவியலாளர் உள்ளிட்ட நால்வர், அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களில் மூவர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த ஊடகவியலாளரை 72 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்புக் காவவில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ள அதேவேளை, ஏனைய மூன்று சந்தேகநபர்களை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 06 மாதங்களுக்கு முன்பு தல்துவ பகுதியில் – மன்னா ரமேஷின் சகோதரர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்பான செய்தி: மரணச் சடங்கில் கலந்து விட்டுத் திரும்பிய நால்வர் மீது துப்பாக்கிச் சூடு: இருவர் மரணம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்