ஈஸ்டர் தாக்குதல்; அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு

🕔 September 20, 2023

ஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் – அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்காத, சில அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20)வாய்மூல கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இது தொடர்பில், வினவினார்.

அதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் பற்றிய சில காணொளிகள் எப்படி கசிந்தன என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்த பொலிஸ் அதிகாரியும் குற்றவாளிகளாக குறிப்பிடப்படவில்லை.

அவர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகள் மாத்திரமே அதில் முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பில் சட்டமா அதிபரே தீர்மானம் எடுத்துள்ளார்.

அத்துடன், தாக்குதல்களுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன பொறுப்புகூறவேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

உச்ச நீதிமன்றமே அவரை குற்றவாளியென கண்டறிந்து, இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் 320வது பக்கத்தில், நிலந்த ஜயவர்தன குற்றத்துக்கு பொறுப்புடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்புஹாமி சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பான மேலதிக விபரங்களை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடவுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்