பச்சை சால்வை போட்ட பைத்தியம்; “வராதே, வராதே”: ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் பொம்மை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

🕔 September 15, 2023

– நூருல் ஹுதா உமர் –

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக – இன்று (15) ஜும்ஆ தொழுகையின் பின்னர், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக – வீதியை மறித்து பொதுமக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டதோடு, அவரின் உருவ பொம்மையினையும் எரித்தனர்.

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வை நாளை (16) சாய்ந்தமருதில் நடத்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள நிலையில், மு.கா தலைவர் ஹக்கீமும் அதில் கலந்து கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருதில் பொதுமக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்ததோடு, “வராதே.. வராதே” என, ஹக்கீமுக்கு எதிராக கோசமிட்டனர்.

இதேவேளை, சாய்ந்தமருதைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், அஷ்ரப் நினைவு நிகழ்வை சாய்ந்தமருதில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்நின்று செய்பவருமான சிராஷ் மீராசாஹிப் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரின் உருவ பொம்மைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர்.

‘ஹக்கீம் காங்கிரஸ்… மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றாதே’, ‘பச்சை சால்வை உடுத்த பைத்தியகாரன் போல – என்று சொன்ன ஹிஸ்புல்லா அவர்களே… நீங்களுமா இந்த பொய் போத்தல்களுடன்? வெட்கம், வெட்கம்’, ‘ரஊப் ஹக்கீம் கள்ளன்’, ‘வேண்டாம்… வேண்டாம்… ஹக்கீம் வேண்டாம்’ ஹக்கீமின் ஊத்தை அரசியலை வெறுக்கிறோம்’ போன்ற பதாதைகளையும் இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி, மு.காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யாதே எனவும்கோசமிட்டனர்.

அஷ்ரப் நினைவு நிகழ்வை சாய்ந்தமருது தனியார் மண்டபம் ஒன்றில் மு.காங்கிரஸ் கட்சியினர் நாளை நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில், மக்களின் எதிர்ப்பு காரணமாக, மண்டபத்தை வழங்க முடியாது என்று, அதற்குரிய நிருவாகத்தினர் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக சாய்ந்தமருது மைதானமொன்றில் அந்த நிகழ்வை நடத்த மு.காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையிலேயே ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்டோருக்கு எதிராக மக்கள் இன்று தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்பான செய்தி: சாய்ந்தமருதில் ‘அஷ்ரப் நினைவு நிகழ்வு’ நடத்துவதில் மு.காவினருக்கு சிக்கல்: “வேறு இடம் பாருங்கள்” என, மண்டப நிர்வாகம் அறிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்