பல்கலைக்கழகங்களில் 408 ஊழியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களில் தமது பதவிகளை ‘காலி’ செய்துள்ளதாக அறிவிப்பு

🕔 July 21, 2023

ரச பல்கலைக்கழகங்களின் கல்விசார் ஊழியர்கள் 255பேரும் கல்விசாரா ஊழியர்கள் 153 பேரும் கடந்த ஒன்றரை வருடங்களில் உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்யாமல், தமது பதவிகளை காலிசெய்துள்ளதாக (vacated their posts) கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2022 ஜனவரி 1 முதல் 2023 மே 25 வரையிலான காலப்பகுதியில் 17 பல்கலைக்கழகங்களில் இருந்து சுமார் 83 கல்வி ஊழியர்கள் மற்றும் 277 கல்விசாரா ஊழியர்கள் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய சபையில் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெளியிட்ட தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழக ஊழியர்கள் தமது பதவிகளை காலி செய்யும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இதன்படி 2021ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை – கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் 519 பேர் தமது பதவிகளை காலி செய்துள்ளனர்.

அந்த வகையில் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் தலா 75 பேரும், களனி பல்கலைக்கழகத்தில் 54 பேரும் குறிப்பிட்ட காலப்பகுதியில் தங்கள் பதவிகளை காலி செய்துள்ளனர்.

2021 முதல் 2023 வரை 663 கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உத்தியோகபூர்வமாக பல்கலைக்கழகங்களில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் 80 ஊழியர்கள் உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்துள்ளனர், யாழ்ப்பாணத்தில் 77 பேர், பேராதனையில் 76 பேர் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் இருந்து 71 பேர் உத்தியோகபூர்வமாக ராஜினாமா செய்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்