ஹரின், மனுஷ ஆகியோர் ஐ.ம.சக்தியிலிருந்து நீக்கம்: செயற்குழு முடிவு

🕔 July 18, 2023

க்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இன்று (ஜூலை 18) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தில் மேற்படி இருவரும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அவர்களின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி இடைநிறுத்தியது, அதே நேரத்தில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் முறையே சுற்றுலா மற்றும் காணி அமைச்சராகவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

பல அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து கூட்டு முயற்சிக்கு சாதகமான பதில் கிடைக்காததால், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண – தங்களால் இயன்றதைச் செய்ய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதாக ஹரின் மற்றும் மனுஷ ஆகியோர் கூறியிருந்தனர்.

பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து, அவர்கள் இருவரும் 2022 ஜூலை 9ஆம் திகதி, மற்ற அமைச்சர்களுடன் தங்கள் அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஆயினும், ஜூலை 22, 2022 அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய அமைச்சரவையை நியமித்தபோது, மேற்படி இருவரும் அதே அமைச்சுப் பதவிகளுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்