10 வருடங்களின் பின்னர் 05 லட்சம் ஹெக்டெயருக்கும் மேற்பட்ட காணியில் சிறுபோக நெற்செய்கை: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

🕔 July 18, 2023

த்து வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து லட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டெயர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விவசாயத்தை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் விவசாய தேவையில் 80 வீதத்தை உள்நாட்டு உற்பத்தியிலிருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட மரக்கறிகள் மற்றும் பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் எனவும், அதன் மூலம் விவசாய பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்த முடியும் எனவும் விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘ஒரு வருடகால முன்னேற்றம்’ என்ற தொனிப்பொருளில் நேற்று (18) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர;

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடத்துக்குள் விவசாயிகளின் பிரச்சினைகளை விரைவாக தீர்த்து அவர்களை விவசாய நிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றபோதும், நான் விவசாய அமைச்சைப் பொறுப்பேற்றபோதும் நாட்டில் நிலவிய நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை. உரம் வழங்கக் கோரி விவசாயிகள் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விவசாயத்திலிருந்து தூரமானார்கள். விவசாயிகள் ஆக்ரோசமாக நடந்து கொண்டார்கள். விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் விவசாய நிலங்களை விட்டு வேறு பகுதிகளுக்குச் சென்றனர். சில இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மக்களை மீண்டும் விவசாய நிலங்களுக்குத் திருப்புவது எமக்கு பிரதான சவாலாக இருந்தது. மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது நம்பிக்கை இருக்கவில்லை. குறைந்த பட்சம் இந்த பிரச்சினை குறித்து பேசக்கூட விவசாயிகள் முன்வரவில்லை.

மீண்டும் வயல்களுக்கு செல்ல வேண்டுமாயின் உரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த சமயம் சிறு போகத்தில் 2,75000 ஹெக்டெயாரில் பயிர்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் 2,12000 ஹெக்டெயாரில் மட்டுமே பயிரிடப்பட்டது.

அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய கடன் திட்டத்தின் கீழ் 6500 மெற்றிக் தொன் உரத்தை வழங்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் இந்திய கடன் வசதியின் கீழ் உரங்களை வழங்க முடியாது என்பதால் ஓமானில் இருந்து கொண்டு வரப்பட்ட உரம்தான் வழங்கப்பட்டது.

உலக உணவு நெருக்கடி வரப்போவதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், எப்படியாவது விவசாயிகளை விவசாய நிலங்களுக்கு திருப்பி அனுப்ப முடிந்தது. சிறுபோகத்தில் ஓரளவு வெற்றியடைந்த போதிலும் உர நெருக்கடி காரணமாக 8 லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நேரிட்டது.

இதன்படி அரசாங்கம் 300 மில்லியன் டொலர் பெறுமதியான அரிசியை இறக்குமதி செய்தது. கால்நடை உணவுக்காக மேலும் 100 மில்லியன் செலவிடப்பட்டது. பெரும்போகத்தில் திட்டமிட்ட விளைச்சல் பெற விவசாயிகளுக்கு யூரியா மற்றும் எம்ஒபி உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான எரிபொருள் மற்றும் நிதி மானியம் வழங்கப்பட்டது. சேதனப் பசளை மற்றும் ஏனைய உரங்களைப் பெற விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்திற்கு மேலதிகமாக மேலும் பெருமளவு நிதியை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

தற்போது சிறுபோகம் தொடங்கியுள்ளது. மூன்று போகங்களுக்கு பின், டிஎஸ்பி உரம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது மட்டுமன்றி புதிதாக இறக்குமதி செய்யப்படும் யூரியா உரம் 9000 ரூபாவிற்கு வழங்கப்படுகிறது. எம்ஒபி உரம்பெற ஒரு ஹெக்டெயாருக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள வவுச்சர் வழங்கப்படுகிறது. விவசாயிகள் எதிர்பார்த்திருக்காத அளவு மானியங்கள் கிடைத்துள்ளது.அவர்கள் இலவச உரம் கேட்கவில்லை. ஆனால் தற்போதைய நிலைமையில் இருந்து மீள அதிக உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருக்கிறார்” என அவர் தெரிவித்தார்.

(ஜனாதிபதி ஊடகப்பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்