‘டிமிக்கி’ கொடுக்கும் சிராந்தி ராஜபக்ஷ

ஐந்து கோடி ரூபாய் பெறுமதியான அரசாங்கத்துக்குரிய வீடு ஒன்றினை, 05 லட்சம் ரூபாவுக்கு சிராந்தி ராஜபக்ஷ, தனது ஊடக செயலாளருககுப் பெற்றுக் கொடுத்தார் எனும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரனை செய்வதற்காகவே, அவரை நாளை திங்கட்கிழமை ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், குறித்த கடிதத்தினை மஹிந்த ராஜபக்ஷவின் நுகேகொட இல்லத்தில் ஒப்படைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அங்கு எவரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, சிராந்தி ராசஜபக்ஷவின் தங்காலை கால்டன் இல்லத்துக்கு பொலிஸார் மூலம், மேற்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கும் அதனை யாரும் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் ஆணைக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது, சிராந்தி தனது ஊடகச் செலாளராகப் பதவி வகித்த மிலிந்த ரத்நாயக்க என்பவருக்கு 05 கோடி ரூபா பெறுமதியான வீடமைப்பு அதிகாரசபையின் வீடு ஒன்றை 05 லட்சம் ரூபாவுக்கு பெற்றுக் கொடுத்தமை தொடர்பிலேயே சிராந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
விமல் வீரவன்ச வீடமைப்பு அமைச்சராகப் பதவி வகித்த காலத்திலேயே, மேற்படி வீட்டினை சிராந்தி ராஜபக்ஷ பெற்றுக் கொடுத்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், குறித்த கடிதத்தினை சிராந்தி ராஜபக்ஷ பெற்றுக்கொள்ளாமையினால், அவர் நாளைய தினம் ஆணைக்குழு முன்னால் ஆஜராக மாட்டார் என்று, சிராந்தியின் சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.