பணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோருவது, ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கம்: நீதிமைச்சர் தெரிவிப்பு

🕔 June 21, 2023

ணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோரப்படுவது தண்டனைக்குரிய குற்றமாக – உத்தேச ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (21) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உத்தேச ஊழல் தடுப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நீதியமைச்சர்; பணிபுரியும் இடங்களில் ஆண்களிடமிருந்தே பெண்கள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை பணியிடங்களில் ஒரே பாலினத்தினருக்கு இடையில் பதிவாகும் பாலியல் துன்புறுத்தல்களை உள்ளடக்குவது குறித்தும் தற்போது பரிசீலிக்கப்பட வேண்டும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

“ஆண்களிடமிருந்து பெண்கள் மட்டும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளவில்லை. பெண்களிடமிருந்து பெண்களும், ஆண்களிடமிருந்து ஆண்களும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வது கவனிக்கப்பட்டுள்ளது”என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்மொழியப்பட்ட மசோதாவில் ‘பாலியல் தயவு’ (sexual favour) என்ற சொல் – குற்றத்தை குறைக்கிறது என்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டியதை அடுத்து, அமைச்சர் இந்த விடயங்களைக் கூறினார்.

எனவே, குற்றத்தின் தீவிரம் சட்டத்தில் பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்வதால், அதற்குப் பதிலாக ‘பாலியல் லஞ்சம்’ என்ற சொல்லை மாற்ற வேண்டும் என்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்