ராணுவ லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் கைது: சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவியதாக குற்றச்சாட்டு

🕔 June 15, 2023

ட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாகப் பயணித்தவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் இலங்கை படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைக்கப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழிகள் வழியாக செல்வதற்கு உதவும் பொருட்டு, இலங்கை ராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் மற்றும் இலங்கை கடற்படை சிப்பாய் ஆகிய மேற்படி இருவரும் 70 லட்சம் ரூபாவை பலரிடமிருந்தும் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 04, 2022 அன்று, திருகோணமலையில் உள்ள சம்பூரில் இருந்து – அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் செய்த 25 பேர் கொண்ட குழுவின் சட்டவிரோத குடியேற்ற முயற்சியை இலங்கை முறியடித்தது.

இதன்போது பிடிபட்ட நபர்கள் விசாரணைக்காக கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த மனித கடத்தல் மோசடி சம்பூரில் வசிக்கும் ஒரு குழுவினரால் நடத்தப்பட்டதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். அதன்படி, மோசடி திட்டம் தொடர்பாக குறைந்தது 20 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அவர்கள் சட்டவிரோதமாக பயணித்தவர்களிடமிருந்து 05 லட்சம் தொடக்கம் 15 லட்சம் ரூபா வரையில், சுமார் 30 மில்லியன் ரூபாய் வரையில் பெற்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்திய போது, இலங்கை ராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் மற்றும் கடற்படை சிப்பாய் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் 70 லட்சம் ரூபாவினையும் மற்றொருவர் 10 லட்சம் ரூபாவினையும் சட்டவிரோத பயணிகளிடம் பெற்றிருந்தனர்.

சட்டவிரோத பயணிகள் குழுவுக்கு கடற்படைச் சிப்பாய் ஒரு படகை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது, அவர்கள் குறித்த படகைப் பயன்படுத்தினால் அதிகாரிகளால் கைது செய்யப்பட மாட்டார்கள் என்று மேற்படி கடற்படை சிப்பாய் உறுதியளித்திருந்தார்.

கடற்படை சிப்பாய் ஜூன் 21 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த லான்ஸ் கோப்ரல் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்