
– முன்ஸிப் அஹமட் (படங்கள் எம்.ஐ.எம். சியாத்) –
மறைந்த கவிஞர் ஆசுகவி அன்புடீன் ‘கலை கலைக்காக’ என்கிற கோட்பாட்டுக்கு எதிராக இருந்தார் என, தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் துறைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தெரிவித்தார்.
அன்புடீன் எழுதத் தொடங்கிய காலம் முக்கியமானது எனக் கூறிய அவர்; “இடதுசாரிக் கொள்கையில் அவருக்கு மிகுந்த ஈடுபடு இருந்தது. கலை கலைக்காக என்கிற கோட்பாட்டுக்கு எதிராக அவர் இருந்தார். உண்மையில் கலை மக்களுக்கானது” என, அவர் குறிப்பிட்டார்.
மறைந்த கவிஞர் ஆசுகவி அன்புடீன் நினைவாக ‘நிலவிலே நினைவேந்தல்’ மற்றும் பிரார்த்தனை நிகழ்வு சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் தலைமையில் நேற்று (03) அட்டாளைச்சேனை ‘பீச் ஹவுஸ்’ விடுதியில் நடைபெற்றது. இதில் சிறைப்புரையாற்றிய போதே, பேராசிரியர் றமீஸ் அப்துல்லா மேற்படி விடயங்களைக் கூறினார்.
ஆசுகவி பொன்விழா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் – அவர் தொடர்ந்து பேசுகையில்;
”ஷவ்வால் பிறையைப் பற்றி கவிதை எழுதிய அன்புடீன், 30 நாள் நோன்பிருந்தமை பற்றி யோசிக்கவில்லை. 300 நாள் நோன்பிருந்தவர்களைப் பற்றி பேசினார். 300 நாள் நோன்பிருந்தவர்கள் என்போர் ஏழைகள். அவர்கள் எப்போதும் பசித்திருப்பவர்களல்லவா? அதனால். அவர்களைப் பற்றி அவர் பேசினார். அதுதான் அவரின் கவிதை.
அந்தக் கவிதைக்குள் இஸ்லாம் கலந்த பொதுவுடமை இருந்தது. அவர் அப்படித்தான் இந்த சமூகம் தொடர்பில் சிந்தித்தார்.
முதலாளித்துவத்துக்கு எதிரானவராக அவர் எப்போதும் இருந்தார். முதலாளிகளுக்கு எதிராக, அதிகாரத்திலுள்ளவர்களுக்கு எதிராக, போடியார்களுக்கு எதிராக அவர் எழுதினார். கூப்பன் கடைக்கார ‘மனேஜர்’களுக்கு எதிராகவும் அவர் எழுதினார்.
அவரின் இவ்வாறான கவிதைகள் எந்தளவுக்கு தாக்கம் செலுத்தியதென்றால், அந்த நேரத்தில் ஏறாவூரில் கூப்பன் கடைகளுக்கு வரும் பொருட்களை இரவு நேரத்தில் முதலாளிமார் பெற்றுக் கொண்டு, அவற்றை தங்கள் கடைகளுக்குக் கொண்டு சென்றார்கள். அவ்வாறான செயற்பாடுகள் குறித்து அன்புடீன் ஒரு கவிதை எழுதிய போது, அதனை ‘நோட்டீஸ்’ அடித்து ஏறாவூரில் பகிர்ந்தார்கள்.
ஆனால் தற்காலத்தில் பலர் எழுதும் கவிதைகளில் கணிசமானவை நமக்கு விளங்குவதில்லை. தற்போது எழுதுகின்றவர்களில் பெரும்பாலானோர் கோட்பாட்டுக்காக மட்டும் எழுதுகின்றார்கள். அவ்வாறானவர்கள் எந்தக் கோட்பாட்டினை முன்நிறுத்த முடியும் எனச் சிந்திக்கின்றார்கள். பின்நவீனத்துவக் கவிதைகள் அல்லது கட்டுடைக்கும் கவிதைகள் என தாம் எழுதுகின்றவை பற்றி அவர்கள் நினைக்கின்றார்கள். அவ்வாறான கவிதைகளில் எதுவும் பேசப்படுவதில்லை. ஆனால் அன்புடீனின் கவிதைகளை நாம் எந்தக் காலத்திலும் பேசலாம்.
ஆனால் சுவரில் இருந்த பல்லி பற்றி சிலர் எழுதும் போது, அதில் கவிதை கூட இருப்பதில்லை. வெறும் வனங்களைப் போட்டு கவிதையாக்கும் போக்கு இப்போது வளர்ந்து கொண்டிருக்கிறது. சிலர் கவிதைகளில் செய்வினை செய்து கொண்டிருக்கின்றனர். இலக்கியத்தை மக்களுக்காகச் செய்யுங்கள். இலக்கியத்தைப் புண்படுத்தாதீர்கள்” எனவும் அவர் இதன்போது கூறினார்.
கிழக்கு மாகாண முதலமைச்சின் முன்னாள் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, தூதுவர் காரியாலய முன்னாள் அதிகாரி எம்.ஏ. சிறாஜ் அகமட், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர், கவிஞர் ஈழமதி ஜப்பார், கவிஞர் பாலமுனை பாறுக், கவிஞர் ஒலுவில் ஜலால்தீன், விரிவுரையாளரும் கவிஞருமான அப்துல் ரஸாக், கவிஞர் ஜே வஹாப்தீன், ஊடகவியலாளரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.எப். நவாஸ் ஆகியோரும் இந்த நிகழ்வில் உரையாற்றினர்.
ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் யு.எம். வாஹிட், ஓய்வு பெற்ற விரிவுரையாளர் எம்.ஐ. அப்துல் லத்தீப், டொக்டர் கே.எல். நக்பர், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் என். சம்சுதீன் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னார் உதவிப் பதிவாளர் பழீல் பி.ஏ மற்றும் வங்கி உத்தியோகத்தர் எம்.ஐ. நபீல் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அன்புடீன் குடும்பம் சார்பாக அவரின் புதல்வி நப்லா ஏற்புரை வழங்கினார்.






