வீதி விபத்துக்களால் வருடாந்தம் மரணிப்போர் விவரம் வெளியானது: மோட்டார் சைக்கிள்களால் அதிக பலி

🕔 May 27, 2023

வீதி விபத்துக்களினால் வருடாந்தம் ஆகக் குறைந்தது 2900 பேர் நாட்டில் மரணிப்பதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், 7 ஆயிரத்து 700 பேரளவில் காயமடைவதாகவும் அந்த சபை கூறியுள்ளது.

இதன்படி, நாளொன்றுக்கு சுமார் 8 பேர் – வீதி விபத்துக்களினால் மரணிப்பதுடன், 22 பேர் காயமடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவான வீதி விபத்துக்கள் பதிவாகுவதாகவும், வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மலித் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் அதிகளவான மரணம் மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் ஏற்படுகிறது. அந்த எண்ணிக்கை சுமார் 1100 ஆக பதிவாகியுள்ளது.

பாதசாரிகள் 750 பேரும், துவிச் சக்கர வண்டி செலுத்துநர்கள் 200 பேரும், 400 பயணிகளும், 400 சிறார்களும் வீதி விபத்துக்களினால் மரணிக்கின்றனர்.

வீதி விபத்துக்களினால், 41 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் உயிரிழக்கின்றனர்.

அத்துடன், 16 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களும், அதிகளவில் மரணிக்கின்றனர்.

கவனயீனமாக வாகனம் செலுத்துவதால், ஏற்படும் விபத்துக்களால் 1500 பேர் வரையில் மரணிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், விதி விதிமீறல்களினால் இடம்பெறும் விபத்துக்களால், சுமார் 500 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வேகத்துடன் வாகனம் செலுத்துகின்றமையால் ஏற்படும் விபத்துக்களில் சுமார் 260 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றமையால், ஏற்படும் விபத்துக்களில் சுமார் 110 பேரும் மரணிப்பதாக, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்