தங்கம் கடத்திய அலி சப்ரி எம்.பிக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

🕔 May 25, 2023

றிவிக்கப்படாத தங்கத்தை வைத்திருந்த குற்றத்துக்காக – புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு விதிக்கப்பட்ட அபராதம், இலங்கையில் அண்மைக்காலமாக கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பாக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் என்று, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர்; கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியின் அடிப்படையில் அதிகபட்சமாக மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்படும் என சுங்க சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், இலங்கையில் அண்மைக்காலமாக அவ்வாறான அபராதம் விதிக்கப்படவில்லை என்றார்.

ராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார; இவ்வாறான குற்றங்களுக்கு சட்டத்தில் மூன்று மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள போதிலும் எம்.பி.க்கு குறைந்த அபராதம் விதிக்கப்பட்டது ஏன் என வினவினார்.

இதற்குப் பதிலளித்த ராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய; “அண்மைக்காலமாக இலங்கையில் இவ்வாறான குற்றத்துக்காக விதிக்கப்பட்ட அபராதத்துடன் ஒப்பிடுகையில், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மிக அதிகமாது என்பதை நான் உறுதியளிக்கிறேன்”” என்றார்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் செவ்வாய்க்கிழமை (மே 22) துபாயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது – சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் 3 கிலோகிராம் எடையுள்ள அறிவிக்கப்படாத தங்கம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு 74 மில்லியன் ரூபாவாகும். அதேவேளை அவரின் பயணப் பெட்டியிலிருந்து 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான 91 கைத்தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து அவருக்கு 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்