மு.கா.வின் தேசியப்பட்டியல் யாருக்கு: அபிப்பிராயங்களும், அனுமானங்களும்

🕔 January 20, 2016

National list MP - 01
– முன்ஸிப் –

முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் நேற்று திடீரென ராஜிநாமா செய்தமையினையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு யார் நியமிக்கப்படுவார் என்கிற கேள்வி இப்போது சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.

இந்த நிலையில், ‘சில மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இல்லாமையால், அப் பிரதேசங்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டே தான் ராஜிநாமாச் செய்ததாக’ டொக்டர் ஹபீஸ் தெரிவித்துள்ள தகவல் இங்கு கவனிக்கத்தக்கதாக உள்ளது.

இதனடிப்படையில் நோக்கும்போது, முஸ்லிம் காங்கிரசின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத பிரதேசங்களைச் சேர்ந்த ஒருவரே, தற்போதைய வெற்றிடத்துக்கு நியமிக்கப்படுவார் என அனுமானிக்க முடிகிறது.

டொக்டர் ஹபீஸ் கூறியமையினை மறுபுறமாக பார்க்கும்போது, ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள், தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

“சில மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இல்லாமையால், அப் பிரதேசங்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டே நான் ராஜிநாமாச் செய்தேன்” என்கிற கருத்தினை எழுந்தமானமாகவோ, அல்லது தனது முழுமையான விருப்பத்தின் அடிப்படையிலோ, டொக்டர் ஹபீஸ் கூறியிருப்பாரா என்கிற சந்தேகமும் இங்கு உள்ளது.

மு.கா. தலைவரும், தனது சகோதரருமான அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய எண்ணவோட்டத்தினை அறிந்து, அதற்கிணங்கவே டொக்டர் ஹபீஸ் மேலுள்ள விடயத்தினைக் கூறியிருப்பார் என்று நம்புவதற்கான சாத்தியங்களே அதிகம் உள்ளன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரதியமைச்சராகவும் பதவி வகித்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எஸ். தௌபீக் – மேற்படி வெற்றிடத்துக்கு நியமிக்கப்படலாம் என்கிற பரவலான பேச்சுக்கள் உள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் சார்பாக தற்போது எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்