கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

🕔 May 7, 2023

நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் பணித்துள்ளது. குறித்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த புகார்களுகளை அடுத்து – இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோரை பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவிக்பட்டுள்ளது.

லண்டனில் நேற்று (06) பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர், புதிய ஆளுநர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த நிலையில் சீனாவின் யுனான் மாகாணத்துடனான அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என, ஜனாதிபதி அலுவலகத்தினால் தனக்கு அறிவிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் சன்டே டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை – அடுத்த வாரம் சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் சந்திக்கவிருந்தார்.

இதேவேளை இந்த உத்தரவு தனக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால், பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில் சன்டே டைம்ஸிடம் கூறியுள்ளார்.

குறித்த மாகாணங்களிலுள்ள நடாளுமன்ற உறுப்பினர்களுடன் – ஆளுநர்கள் இணைந்து பணியாற்றாமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் சன்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்