அமெரிக்காவில் துப்பாக்சிச் சூடு: 08 பேர் பலி, 07 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிதாரியொருவர் நடத்திய தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள பரபரப்பான வணிக வளாகத்தில் சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிதாரியின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 06 பேர் சம்பவ இடத்திலும், இருவர் வைத்தியசாலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் குழந்தைகளும் உள்ளனர் என நேரடியாக சம்பவத்தைக் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானவர்களில் 03 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிதாரி தனது காரில் இருந்து இறங்கி வாகன நிறுத்துமிடத்தில் இந்த துப்பாக்கித் தாக்குதலை நடத்தியுள்ளார்.
இதனையடுத்து மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.