ஜனாதிபதியின் ‘கொல்லாமை’: சாத்தியமற்ற பகற்கனவு

🕔 January 19, 2016

லங்கையில் கால்நடைகள் கொல்லப்படுவதனைத் தடுக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதி செய்யவுள்ளதாக, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இறைச்சி இறக்குமதி செய்வதற்கான கோரிக்கையினை முன்வைத்ததாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இலங்கையில் கால்நடைப் பண்ணை உற்பத்தி தொடர்பாகவும், கால்நடைகளைக் கொல்வதனைத் தடுக்கும் வகையில் இறைச்சி இறக்குமதி மேற்கொள்ளப்பட்டால், உள்நாட்டு கால்நடை மற்றும் இறைச்சி உற்பத்திப் பண்ணையாளர்கள் எதிர்நோக்கவுள்ள சவால்கள் குறித்தும், கலாநிதி இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.Inamullah - 001

லங்கை சனத்தொகையில் பாதிப்பேரை வாழவைக்கும் பண்ணைத் தொழிலுக்கு சாவுமணி அடிப்பது பகல் கனவாகும். இது ஒரு தேசியப் பிரச்சினை.

தற்பொழுது இலங்கையில் 04 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாக பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை கோழி, ஆடு மற்றும் மிருகப் பண்ணை வளர்ப்பில் 1.2 மில்லியன் குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் ஒரு பகுதி உணவுத் தேவையினை, ‘கால்நடை வளர்ப்பு பெருமளவில் ஈடுசெய்கின்றது. இலங்கையின் சனத்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, ஒரு வருடத்துக்கு 750 மில்லியன் லீட்டர் பாலும், 2,000 மெட்ரிக் தொன் இறைச்சியும் தேவைப்படுவதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

ஏற்கனவே பாலுற்பத்திப் பொருட்களின் இறக்குமதிக்காக, சுமார் 440 கோடி ரூபாய்களை வெளிநாட்டுச் செலாவணியாக நாடு இழந்த கொண்டிருக்கிறது. இதனால், இலங்கையில் கால்நடைவளர்ப்பை ஊக்கு விப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

பாலுற்பத்திக்காக நடத்தப்படும் பண்ணைகளில் பிறக்கும் காளைக் கன்றுகளும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் பெறுகின்ற காளைக் கன்றுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.  இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் கிராமிய விவசாயிகள் சீவியம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அதேபோன்று, சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்கள் பால் கறந்த பின்னர், வயதுமுதிர்ந்த பசு மாடுகளையும் இறைச்சிக்காக விற்பதும் வழமையாக உள்ளது. அவ்வாறுதான் ஆடுகளும்.

எந்தவொரு விவசாயியும், பண்ணையாளரும் – தமது கால்நடைகள் இயற்கையாக மரணிக்கும் வரை, அவற்றினை வைத்துப் பராமரிப்பதில்லை.

நீண்ட காலத்துக்கு அவற்றை பராமரிக்கும் பொருட்டு இயற்கையான புல், தாவர  மற்றும் தானிய வகைகளைப் பெற்றுக் கொள்வதென்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். அவ்வாறான செயற்பாடானது, இந்த நாட்டில் பொருளாதார மற்றும் சுற்றுச் சூழல் நெருக்கடிகளைத்தான் தோற்றுவிக்கும்.

கால்நடைகளை அறுக்கின்றமை தடை செய்யப்பட்டால், பாதிக்கப்படுவது இலங்கையின் கிராமியப் பொருளாதாரம்தான். ஏற்கனவே இலங்கையில் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் வருடாந்தம் சுமார் மூன்று இலட்சம் பேர், கடல் கடந்து மத்திய கிழக்கு நோக்கி படை எடுக்கின்றார்கள்.

இந்த விவகாரம் முஸ்லிம்களை மாத்திரம் பாதிப்பதாக அமையாது. அதேவேளை, சரியான பொருளாதார திட்டமிடல் ஆலோசனைகள் பெறப்படாமல், அரசியல்வாதிகள் வெளியிடும் கூற்றுக்கள் குறித்து, ஆத்திர அவசர எதிர்வினையாற்றல்களை நாம் மேற்கொள்வது ஆரோக்கியமாகவும் இருக்காது.

இலங்கையில் சந்தைப்படுத்தப்படும் மாட்டிறைச்சியில் மூன்றில் ஒரு பகுதியையேனும் முஸ்லிம்கள் நுகர்வதில்லை. மாட்டிறைச்சியை முஸ்லிம் அல்லாதவர்களும் நுகர்கின்றார்கள். சுற்றுலாத்துறையினரும் கொள்வனவு செய்கின்றனர்.

நேற்றைய நிகழ்வில், ஜனாதிபதி  உரை நிகழ்த்திக் கொண்டிருந்த பொழுது, சுவாரசியமானதொரு சம்பவம் இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அதாவது ஜனாதிபதியின் உரையினை தமிழில் மொழி பெயர்த்தவர் மாமிசம்/இறைச்சி என்பதனை மாட்டிறைச்சி என்று மொழி பெயர்த்ததாகவும், இதன் பொழுது குறுக்கிட்ட ஜனாதிபதி, “இல்லை இல்லை எல்லா வகையான இறைச்சியும் தான்” என்று சொன்னதாகவும் தெரியவருகிறது.

எனவே – ஆடு, மாடு, கோழி, மீன் மற்றும் பன்றி என சகல விதமான மாமிசங்களையும் இறக்குமதி செய்யப்போவதாக, எந்த நோக்கத்தில்- – எந்தவொரு தைரியத்தில் இவ்வாறானதொரு கருத்தினை வெளியிட்டுள்ளார் என்பதனை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்