“நாடு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டமைக்கு இனவாதிகளும், சில மதகுருகளுமே காரணம்”: பொன்மலைக் குடா விவகாரம் தொடர்பில் றிசாட் குற்றச்சாட்டு

🕔 April 6, 2023

புல்மோட்டை – அரிசிமலை பிரதேசத்திலுள்ள பொன்மலைக் குடா பகுதியில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள இனவாத விஸ்தரிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து நாடாளுமன்றில் நேற்று முன்தினம் (04) உரையாற்றிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், இனவாத மற்றும் மதவாதப்  போக்குகளினாலேயே நாட்டின் பொருளாதாரம் கையேந்தும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்;

“இதுவரை காலமும் ஆட்சியமைத்தவர்களும் ஆட்சியமைக்க துடித்தவர்களும், பேரினவாத சிந்தனையோடு இனவாதத்தை முதலீடாகவும் மூலதனமாகவும் தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தினர். இதன் விளைவே நாடு இந்தளவுக்கு சீரழிந்துபோக காரணமாய் அமைந்துள்ளது.

பிச்சை எடுக்கின்ற நிலைக்கும் அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்கும் நாம் தள்ளப்பட்டுள்ளோம். இதற்கான பொறுப்பை இனவாத தலைவர்களும் அதற்குப் பக்கபலமாக நின்று தீனிபோட்ட சில மதகுருமார்களுமே ஏற்க வேண்டும்.

திருகோணமலை மாவட்டம் முன்னர் திருகோணமலை, மூதூர் ஆகிய இரண்டு தேர்தல் தொகுதிகளையே கொண்டிருந்தது. பின்னர், சேருவில என்ற புதிய தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டு, சிங்களப் பெரும்பான்மையினர் அங்கு குடியேற்றப்பட்டனர். இந்த தேர்தல் தொகுதி 1690 சதுரக்கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்டது. திருமலை மாவட்டத்தில் திருகோணமலை தொகுதி 585 சதுரக்கிலோமீற்றர் ஆகவும் மூதூர் தொகுதி 368 சதுரக்கிலோமீற்றர் ஆகவும் இருக்கின்றது.

திருமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் இருந்து 500 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் இருக்கின்ற தேரர் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது அடியாட்களுடனும் ஆயுததாரிகளுடனும் வந்து அரிசிமலை – பொன்மலைக் குடா பிரதேசத்தில், முஸ்லிம்கள் வாழுகின்ற பகுதியில் புத்தர் சிலை வைக்க முயற்சித்ததில் களேபரம் ஏற்பட்டது.

அப்பிரதேச மக்களை அங்கு வந்த ஆயுததாரிகள் அச்சுறுத்தியும் உள்ளனர். குறித்த மதகுருவுக்கு ஆயுதப் பாதுகாப்பு வழங்கியது யார்? அந்தப் பிரதேசத்தில் பௌத்தர்களும் இல்லை, அவ்வாறிருக்க, அப்பிரதேசத்துக்கு வலுக்கட்டாயமாக வந்து இவ்வாறன முயற்சி ஒன்றில் அவர் ஈடுப்பட்டிருக்கின்றார். இந்த நடவடிக்கை இனங்களுக்கிடையிலான விரிசலை ஏற்படுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

புல்மோட்டையில் வாழும் மக்களுக்கு 10 பேர்சஸ் கூட காணி இல்லாத நிலையில், அடுத்த பரம்பரைக்கும் எங்குமே காணி இல்லாத ஒரு நிலையில் இருக்கின்றபோது, இவ்வாறான ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதன் நோக்கம்தான் என்ன?

ஏற்கனவே, அந்தப் பகுதியில் தொல்லியல் திணைக்களம் 1200 ஏக்கரை வர்த்தமானியின் மூலம் பிரகடனப்படுத்தி, அதன் பின்னர் வெளிமாவட்டங்களிலிருந்து ஆட்களை கொண்டுவந்து விவசாயம் செய்ய வழிவகுத்துள்ளனர்.

தொல்லியல் திணைக்களம் ஒரு இனத்துக்கும் மதத்துக்கும் மட்டுமே பணிபுரிகின்ற அவல நிலை எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. தற்போது, பொன்மலைக் குடாவிலும் சிலையை வைத்து, அந்த இடத்தை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதே இவர்களின் குறிக்கோளாக இருக்கின்றது.

இதேபோன்று வடக்கு, கிழக்கில் தொல்லியல் திணைக்களம், வனபரிபாலனத் திணைக்களம் ஆகியன, தாம் நினைத்த மாத்திரத்தில் மக்களின் பூர்வீகக் காணிகளை சுவீகரித்து, மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கி வருவதையும் நாம் காணமுடிகிறது.

எனவே, மேற்படி விடயத்தில் ஜனாதிபதி பாராமுகமாக இருக்காமல் நேரடியாகத் தலையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அத்துடன், குறித்த மதகுருவுக்கு வழங்கியிருந்த ஆயுதப் பாதுகாப்பு தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

(நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்