பெருமளவு கஞ்சாவுடன் கல்முனை நபர் சாய்ந்தமருதில் கைது
– பாறுக் ஷிஹான் –

கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரொருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (30) சாய்ந்தமருதில் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கல்முனை பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கவராவார். இவரிடமிருந்து 01 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கஞ்சாவை கடத்தி செல்வதற்கு தயாராக இருந்த வேளை, சாய்ந்தமருது இலங்கை வங்கிக்கு முன்பாக வைத்து சந்தேக நபர் மோட்டார் சைக்கிளுடன் கைதானார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து ஒரு தொலைபேசி, பொதி செய்யப்பட்ட 01 கிலோகிராம் கேரளா கஞ்சா, ஒரு தொகை பணம், மோட்டார் சைக்கிள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர் – சான்றுப் பொருட்களுடன் சாய்ந்தமருது பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்பட்டனர்.
நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குறித்த சந்தேக நபரை – விசேட அதிரடிப்படையினர் மாறுவேடத்தில் சென்று நீண்ட போராட்டத்தின் பின்னர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.