கண்ணீர் புகை தாக்குதலில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்ததாக சந்தேகம்: நாடாளுமன்றில் தெரிவிப்பு

🕔 March 9, 2023

பொலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சந்தேகிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுடன் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை ஏற்பட்ட மோதலின் போது, பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொலிஸாரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் அப்பகுதியை சூழ்ந்திருந்ததுடன், அருகில் உள்ள பாடசாலைகளையும் பாதித்ததாக புத்திக பத்திரன தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடனான மோதலின் போது கொழும்பு பல்கலைக்கழக வளாகத்துக்குள் பொலிஸார் பலவந்தமாக நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர் சங்கங்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு தயார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்துக்குள் பொலிசார் பிரவேசித்ததாக வெளியான செய்திகளை ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குதெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்