அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர் மீது சக ஆசிரியர் தாக்குதல் முயற்சி; அதிபரின் சொற்படி காசோலை எழுதாமையே பின்னணி என்கிறார் பாதிக்கப்பட்டவர்

🕔 March 7, 2023

– அஹமட் –

பாடசாலை முகாமைத்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தனது சக ஆசிரியர் ஒருவர் தன்னை தூஷண வார்த்தைகளால் பேசி, தாக்குவதற்கு முயற்சித்தார் என, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் பொறுப்பிலுள்ள ஏ.ஆர். அசாபிர் எனும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு புகாரளித்துள்ளார்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்படாத நிலையில், அபிவிருத்திச் சங்கத்தின் காசோலைகளை எழுதி வழங்குமாறு அதிபர் தம்மிடம் கேட்டதாகவும், அதற்கு – தான் சம்மதம் தெரிவிக்காமையே இந்த தாக்குதல் முயற்சிக்கான காரணம் எனவும் ஆசிரியர் அசாபிர் கூறுகின்றார்.

“பாடசாலை அபிவிருத்தி சங்கத்துக்கான வருடாந்த அமுலாக்கல் திட்டத்தை அதிபர் வழங்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டே வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்படும். ஆனால் இந்த இரண்டும் இதுவரை தயாரிக்கப்படவில்லை” என தெரிவிக்கின்றார் அசாபிர்.

பாடசாலை அபிவிருத்திக் குழுவின் வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்படாத நிலையில், எந்தவொரு செலவின் பொருட்டும் காசோலை எழுத முடியாது என்றும் அவர் விளக்கமளித்தார்.

“அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபரும், மூன்று ஆசிரியர்களும் சில மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு பயணமொன்றை மேற்கொண்டிருந்தனர். பின்னர் அந்தப் பயணத்துக்கான எரிபொருள் கொடுப்பனவாக 37,350 ரூபாவை வழங்குமாறு அதிபரின் சிபாரிசுடன் மேற்படி மூன்று ஆசிரியர்களும் எழுத்து மூலம் கோரியிருந்தனர். ஆனால், குறித்த தொகையை வழங்குவதற்கு நான் மறுத்து விட்டேன்.

காரணம், அவர்கள் உத்தியோகபூர்வமாக அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தால், வலயக் கல்வி அலுவலகத்தில் கடமை விடுப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எந்த விடுப்பும் பெறவில்லை. அல்லது அந்தப் பயணத்துக்கான அனுமதியை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தில் பெற்றிருக்க வேண்டும். அப்படியும் பெறப்படவில்லை. எனவே, அது உத்தியோகபூர்வ பயணம் இல்லை என்பதால், அவர்கள் கோரிய பணத்தை வழங்க முடியாது என கூறிவிட்டேன். அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் அதிபரும், அவருடன் தொடர்பானவர்களும் எனக்கு எதிராக நடந்து கொள்கின்றனர்” என அசாபிர் விவரித்தார்.

ஒரு தடவை பாடசாலை அபிவிருத்தி சங்கக் கூட்டத்தின் போது, தன்னை பொருளாளர் பதவியிருந்து விலகிச் செல்லுமாறு அதிபர் அச்சுறுத்தியதாக கூறிய ஆசிரியர் அசாபிர், அதற்கு தான் உடன்படவில்லைஎன்றும், சினிமா பாணியில் தன்னை அச்சுறுத்த முடியாது என அதிபரிடம் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

தனது முறைப்பாட்டுக்கு அமைவாக நேற்றைய தினம், தன்னை அச்சுறுத்திய ஆசிரியரும் தானும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டதாகவும், இந்த விசாரணையின் பொருட்டு அதிபரையும் பொலிஸார் அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் ஏ.சி.எம். ஹரீசை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதற்கு ‘புதிது’ செய்தித்தளம் முயற்சிகளை மேற்கொண்ட போதும், அது பயனளிக்கவில்லை.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்குள் போதைப் பொருள் வியாபாரம்: மாணவர்கள் சிக்கிய போதும், சம்பவத்தை மூடி மறைக்கிறது நிர்வாகம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்