ஈஸ்டர் தின தாக்குதல் விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு நிராகரிப்பு

🕔 March 1, 2023

ஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குமாறு தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து, அவற்றிலிருந்து தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ மொராயிஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகியோரால் இந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் அரசாங்க அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.

உளவுத்துறை தகவல் கிடைத்தும் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியதாக சிறிசேன மற்றும் பலருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போதே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதன்படி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ 50 மில்லியன் ரூபாவும் இழப்பீடாக செலுத்த வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்துடன், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபா வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளை தேசிய புலனாய்வு தலைவர் சிசிர மெண்டிஸ் 10 மில்லியன் ரூபா இழப்பீடாக செலுத்த வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்