நெல் மற்றும் அரிசி கொள்வனவு, உற்பத்தி, விற்பனையின் போது சமூகப் பாதுகாப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கிகாரம்

🕔 February 28, 2023

நெற் கொள்வனவு, அரிசி உற்பத்தி, மற்றும் விற்பனையின் போதான சமூகப் பாதுகாப்பு வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்பொருட்டு 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு அறவீட்டு சட்டத்தைத் திருத்துவதற்கா நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் எனும் வகையில் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

நெல் விவசாயிக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரசாங்கத்தால் ஒருகிலோ நாடு நெல் 100/- ரூபாவுக்கு கொள்வனவு செய்து, குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒரு கிலோ நெல்லுக்காக விவசாயிகளுக்கு செலுத்தப்படுகின்ற பணத்துக்கு மேலதிகமாக, அரிசி உற்பத்தி செயன்முறையில் ஒரு கிலோ அரிசியை நுகர்வோருக்கு வழங்கும் வரைக்குமான நீர்க்கட்டணம், மின்சாரக் கட்டணம், களஞ்சிய வசதிகள், போக்குவரத்து போன்ற மேலதிக செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அதற்கு மேலதிகமாக சமூகப் பாதுகாப்பு வரியாக ஒருகிலோ அரிசிக்கு 6.00/7.00 ரூபாவை செலுத்த வேண்டியிருக்கின்றமையை அரிசி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த செலவைக் குறைத்துக் கொள்வதற்காக – ஓரளவு சலுகையை வழங்க முடியுமாயின் விவசாயிகளுக்கு அதிக விலையை வழங்க முடியுமென மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, சந்தையில் தற்போது நிலவுகின்ற அரிசியின் விலையை அவ்வாறே பேணிக்கொண்டு, ஒரு கிலோ நாடு நெல்லுக்கு 100.00 ரூபாவுக்கு அதிகமான விலையை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு இயலுமாகும் வகையிலும் நெற் கொள்வனவு, அரிசி உற்பத்தி, மற்றும் விற்பனையின் போதான சமூகப் பாதுகாப்பு வரியை நீக்குவதற்காக 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு அறவீட்டு சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்