போதைப் பொருளுக்கு எதிரான கருத்தை திரிபுபடுத்துவோர், அந்த வியாபரத்துடன் தொடர்புபட்டவர்களா?; சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக, வேட்பாளர் அமீர் தெரிவிப்பு

🕔 February 14, 2023

– அஹமட் –

போதைப் பொருள் பாவனைக்கு எதிராக – தான் வெளியிட்ட கருத்தை திரிபுபடுத்தி தனக்கு எதிராக பிரசாரம் செய்கின்றவர்கள், போதைப் பொருளுடன் தொடர்புபட்டவர்களா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, அல் முனீறா வட்டாரத்தில் போட்டியிடும் ஏ.கே. அமீர் தெரிவித்துள்ளார்.

தான் போட்டியிடும் வட்டாரத்திலுள்ள 06ஆம் பிரிவின் ஒரு சில இடங்களில், இளைஞர்கள் போதைப் பொருள் பாவனையுடன் தொடர்புபட்டுள்ளமையை – கவலையுடன் தான் சுட்டிக்காட்டியிருந்ததாகவும், அதனை வேட்பாளர் ஒருவரின் வெளிநாட்டிலுள்ள உறவினர் மற்றும் முன்னாள் அரசியல்வாதியொருவரின் உறவினர் உள்ளிட்ட சிலர், திரிபுபடுத்தி – தனக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதாகவும் அமீர் சுட்டிக்காட்டினார்.

“இலங்கை தற்போது போதைப் பொருள் கடத்தலுக்கான கேந்திர மையமாக உலகளவில் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படிக் கூறுவது இலங்கை மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தி விடாது.

அதேபோன்று, சில காலமாக எனது ஊர் அட்டாளைச்சேனையில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதனைக் கூறுவதால் அட்டாளைச்சேனை மக்கள் கோபித்து விடப் போதவில்லை.

இதேபோன்றுதான் தேர்தலில் நான் போட்டியிடும் வட்டாரத்தின் 06ஆம் பிரிவிலுள்ள சில இடங்களில் – போதையுடன் தொடர்புபட்ட செயற்பாடுகள் இடம்பெறுவதை எனது உரையொன்றில் குறிப்பிட்டு, அதனை இல்லாமல் செய்ய வேண்டும் என்று அண்மையில் கூறியிருந்தேன்.

அட்டாளைச்சேனை 06ஆம் பிரிவானது – நான் பிறந்த இடமாகும். அங்குதான் எனது கு டும்பத்தினரில் அதிகமானோர் வாழ்கின்றனர். எனது உரையில் 06ஆம் பிரிவை நான் சுட்டிக்காட்டியமைக்கு, அந்த அக்கறையும் ஒரு காரணமாகும்.

இதனை அரசியல் ரீதியாக என்னுடன் காழ்ப்புணர்ச்சியுள்ள சிலர் திரிபுபடுத்தி, 06ஆம் பிரிவு மக்களை நான் அவமானப்படுத்தி விட்டதாக பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு நடந்து கொள்கின்றவர்கள் போதைப் பொருளுடன் தொடர்புபட்டவர்களாக இருப்பார்களே என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என, அமீர் மேலும் கூறினார்.

“எனது வட்டாரத்தில், எனது ஊரில் போதைப் பொருள் பாவனையை இல்லாமலாக்க வேண்டும் என்று, சமூக அக்கறையுடன் நான் கூறியது, இவர்களை ஏன் கலவரப்படுத்தியுள்ளது? இளைஞர்களை போதைப் பொருள் பாவனையாளர்களாக வைத்திருக்க இவர்கள் விரும்புகிறார்களா? அப்படியென்றால் போதைப் பொருள் வியாபாரத்துடன் இவர்களுக்குத் தொடர்புகள் உள்ளனவா? என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஒரு கட்சியில் இருந்து, அட்டாளைச்சேனையில் காடைத்தனம் புரிந்து விட்டு, இப்போது இன்னொரு கட்சிக்குத் தாவி – தேர்தலில் போட்டியிடும் நபர் ஒருவரின் உறவினரும், அரசியலில் தோல்வியடைந்த நிலையில் நாட்டை விட்டுச் சென்றுள்ள ஒருவரின் உறவினர் உள்ளிட்ட சிலரும் – எனக்கு எதிரான இந்த திரிபுபடுத்தப்பட்ட பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

இவர்கள் எந்தப் பக்கம் சென்றாலும், இவர்களின் குணம் மாறாது என்பதை இந்த நடவடிக்கைகள் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

முன்பு அரசியலுக்காக கத்தி, வாள், பொல், தடிகள் போன்றவற்றை கையில் எடுத்து சண்டித்தனம் புரிந்தவர்கள், இப்போது தமது போட்டியாளர்களை தாக்குவதற்கு சமூக ஊடகங்களை கையில் எடுத்துள்ளார்கள். இவர்களை அரசியலில் இருந்து மக்கள் ஒதுக்கி விட வேண்டும்.

தங்கள் அரசியலுக்காக இளைஞர்களுக்கு சாராயத்தையும் போதைப் பொருளையும் கொடுத்து வழி கெடுத்த இவர்களுக்கு, போதைப் பொருளுக்கு எதிராக நான் பேசுவது கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர்களின் அரசியலுக்காக எனது ஊர் இளைஞர்களை பலிகொடுக்க முடியாது” என, அமீர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்