அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான பயிலுநர்களை குறைக்கும் சதித் திட்டம் முறியடிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

🕔 February 6, 2023

– அஹமட் –

ட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கான ஆசிரிய பயிலுநர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமையை வெளிப்படுத்தியும், அதிலுள்ள சூழ்ச்சியினை அம்பலப்படுத்தியும் ‘புதிது’ செய்தித்தளம் தகவல்களை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இஸ்லாம் பாடநெறிக்கான ஆசிரிய பயிலுநர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கென கடந்த காலங்களில் ஒரு கல்வியாண்டுக்கு 30 பயிலுநர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

ஆனால் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் தோற்றிய மாணவர்களில் இருந்து, இரண்டு கல்வியாண்டுகென இஸ்லாம் பாடநெறிக்கு 20 பயிலுநர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது கடந்த கால கணக்குடன் ஒப்பிடுகையில் 40 பயிலுநர்கள் குறைக்கப்பட்டனர்.

இவ்வாறு இஸ்லாம் பாடநெறிக்கான பயிலுநர்களைக் குறைப்பதனூடாக, அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை ஏற்படுத்துவதற்கான சதித் திட்டமொன்று இருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியியில் இஸ்லாம் பாடநெறிக்கான ஆசிரிய பயிலுநர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை குறித்தும், அதிலுள்ள சூழ்ச்சிகளின் பின்னணிகள் தொடர்பிலும் ‘புதிது’ செய்தித்தளம் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து, இவ்வாறு இஸ்லாம் பாடநெறிக்கான பயிலுநர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை தொடர்பில் கல்வியமைச்சருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடிதமொன்றினை எழுதியது. அந்தக் கடிதத்தில் இஸ்லாம் பாடநெறிக்கு அதிக பயிலுநர்களை சேர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்தியிருந்தது.

இந்தப் பிண்ணயில் தற்போது அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் இஸ்லாம் பாடநெறிக்கு இரண்டு கல்வியாண்டுக்கும் சேர்த்து 60 ஆசிரிய பயிலுநர்களை இணைத்துக் கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதனை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதி எம்.சி. ஜுனைட் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய 2019ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் புதிய பாடத் திட்டத்திலிருந்து 19 பேரும், பழைய பாடத் திட்டத்திலிருந்து 11 பேரும் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதேவேளை 2020ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் புதிய பாடத்திட்டத்திலிருந்து 28 பேரும் பழைய பாடத்திட்டத்திலிருந்து 02 பேரும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரிக்கு புதிய ஆசிரிய பயிலுநர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதியிலிருந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்திகள்

01) அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் முஸ்லிம் பயிலுநர்களின் எண்ணிக்கையை குறைக்க சதி: பீடாதிபதி புண்ணியமூர்த்தியின் ‘விளையாட்டு’ தொடர்வதாக குற்றச்சாட்டு

02) அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி; இஸ்லாம் பாடத்துக்கு பயிலுநர்கள் குறைக்கப்பட்டவிவகாரம்: கல்வியமைச்சருக்கு ஜம்இய்யத்துல் உலமா கடிதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்