உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 09: செலவுக்கு பணம் வழங்க மறுப்பது 03 வருட சிறைத்தண்டனைக்குரிய குற்றமாக அமையும்

🕔 January 21, 2023

உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 09ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று (21) நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு திறைசேரி செயலாளர் பணம் வழங்க மறுத்தால், அது 03 வருடங்கள் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாக அமையும் என, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூராட்சித் தேர்தலை தாமதப்படுத்த – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கூட்டமொன்றில் இன்று (21) உரையாற்றும் போது, அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

“தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்கிறது. தேர்தல் நடத்தப்பட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் கூறுகிறது”.

“அவர்கள் திறைசேரியின் வருமானத்தை அதிகரிக்க விரும்பவில்லை. அப்படி நடந்தால் அவர்கள் ஒரு தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆகையால், அவர்கள் திறைசேரி வருமானத்தைக் குறைத்து வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் நீண்ட காலம் அதிகாரத்தில் இருக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது என்று இதன் போது சுட்டிக்காட்டிய அனுர குமார திஸாநாயகக்க; “தேர்தலுக்கு பணம் வழங்க திறைசேரியின் செயலாளர் மறுத்தால், அது 03 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாக அமையும்” என்றும் எச்சரித்தார்.


Comments

புதிது பேஸ்புக் பக்கம்