தலைப்புச் செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை: ஜனாதிபதி அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இதனை ஜனாதிபதி நேற்று (03) கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்களில் ஈடுபடாமல், இரண்டு வருடங்களுக்குள் நாட்டை உயர்த்துவதற்காக தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை மீறுவதற்கு தாம் தயாரில்லை என கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட விரும்பினால், பாரம்பரியத்துக்கு அமைவாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் தலைவராக மாத்திரமே பதவி வகிக்கத் தயார் என அவர் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், 40% வேட்பாளர்கள் புதிய முகங்களாக இருக்க வேண்டும் என்றும், கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் அவர் கூறியுள்ளார்.

தேர்தலில் தெரிவுசெய்யப்படும் 4,000 பிரதிநிதிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் சம்பளம் அல்லது சலுகைகள் இல்லாமல் இலவசமாக பணியாற்றுவார்களா என்பதை அறிவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.