மின் கட்டணத்தை அமைச்சரவையே தீர்மானிக்கும்;பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமில்லை: ஜனாதிபதி

🕔 December 8, 2022

மின் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளும் அதிகாரம், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் மாத்திரமே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (08) வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

மின் கட்டண திருத்தம் குறித்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில், விசாரணை நடத்துவது குறித்து, நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“கடந்த ஓகஸ்ட் மாதத்தில் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், அது போதுமானதல்ல.

அடுத்த வருடம் 151 பில்லியன் நட்டம் ஏற்படவுள்ளது. 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 300 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த வருடத்தில் வறட்சி ஏற்பட்டால் மேலும் 420 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும். போதிய மழை கிடைத்தால் அது 300 பில்லியனை விட குறையலாம்.

அரசுக்கு தற்போது வருமானம் இல்லை. பணம் அச்சடித்தால் ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையும். வெற் வரியை அதிகரிப்போமாயின், பொருட்கள் விலையேறி பெரும் பிரச்சினைகள் ஏற்படும்.

எனவே, மின்கட்டணத்தை அதிகரிப்பதொன்றே இந்த நட்டத்தினை தவிர்த்துக்கொள்வதற்கான ஒரே வழியாகும்.

அவ்வாறு செய்யாவிடின் மின்துண்டிப்பினை அதிகப்படுத்த வேண்டும். எனினும், எதிர்வரும் காலங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதால் மின்வெட்டில் எனக்கு உடன்பாடு இல்லை.

மக்களின் சுமைகளை எவ்வாறேனும் தீர்க்க வேண்டும். நட்டத்தை நிவர்த்திக்காமல் சர்வதேசத்திடமிருந்து நிதியுதவி எதிர்பார்க்க முடியாது.

விரும்பமின்றியேனும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டும். மக்களிடம் செல்வாக்கற்ற தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் இதனை செய்யாததால் நாம் இன்று இந்த இடத்தில் இருக்கின்றோம்.

மின்கட்டண திருத்தம் குறித்து, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானிக்க முடியாது. நியதிச் சட்ட நிறுவனமொன்றின் பிரதானியொருவர் அவ்வாறு தான்தோன்றிதனமாக செயற்பட முடியாது.

எனவே, கட்டணத்தை அதிகரித்தால் மட்டுமே நட்டத்தினை தவிர்த்துக்கொள்ள முடியும்” எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்