அட்டாளைச்சேனை பிரதேச சபை ‘பட்ஜட்’ வெற்றி; தவிசாளரை பதவி கவிழ்க்கும் மு.கா தலைவரின் திட்டம் என்னானது?: அம்பலப்படுத்துகிறது ‘புதிது’

🕔 December 8, 2022

– மரிக்கார் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் (பட்ஜட்) வெற்றிபெற்றுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் இன்று (08) சபை அமர்வு இடம்பெற்றது. இதன்போது அவர் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்பித்தார்.

இதன்போது, சபைக்கு சமூகமளித்திருந்த 10 உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 18 உறுப்பினர்களில் இருவர் இன்று சபைக்கு சமூகமளிக்கவில்லை. ஆனால், 06 உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்ட வாக்களிப்புக்குப் பின்னரே சபைக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடித்து, தவிசாளர் அமானுல்லாவை பதவி கவிழ்க்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – சபையின் உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான ஏ.எஸ்.எம். உவைஸிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் ‘புதிது’ செய்தியொன்றினையும் வெளியிட்டிருந்தது.

ஆனாலும், இந்த செய்தி வெளியான பின்னர் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் காரணமாக, இன்றைய வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க சபை உறுப்பினர்கள் இணங்கினர்.

பின்னணியில் நடந்தவை என்ன?

தவிசாளரை பதவி கவிழ்க்குமாறு மு.கா தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தமை, ‘புதிது’ தளத்தில் செய்தியாக வெளியாகும் வரை தவிசாளர் அமானுல்லாவுக்கு தெரிந்திருக்கவில்லை. ‘புதிது’ செய்திதான் அவரை இந்த விடயத்தில் உசார் படுத்தியது.

இந்த நிலையில், தவிசாளருக்கு எதிரான மு.கா தலைவரின் நிலைப்பாட்டினை தமக்கு சாதகமாக்கிக் கொண்ட சபையின் உறுப்பினர்கள், தவிசாளரிடம் நேற்று பேச்சுவார்த்தையொன்றை நடத்தியிருந்தனர். அதன்போது தமது வேலைத்திட்டங்களுக்கு உடனடியாக நிதியை ஒதுக்க வேண்டுமென பேரம் பேசினர். அதற்கு தவிசாளரும் உடனடியாக இணங்கினார்.

இது இவ்வாறிருக்க, தவிசாளர் அமானுல்லாவை பதவி கவிழ்த்து விட்டு, அந்த இடத்துக்கு பிரதித் தவிசாளர் ஹனீபாவை தவிசாளராக நியமிக்கும் விருப்பத்தை மு.கா. தலைவர் வெளிப்படுத்தியிருந்த போதும், பிரதேச சபை உறுப்பினர்களில் பலருக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை.

பிரதித் தவிசாளர் ஹனீபா – தவிசாளராக வருவதை விடவும், தற்போதைய தவிசாளர் அமானுல்லா தொடர்ந்தும் அந்தப் பதவியில் இருப்பதையே அநேகமான உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.

இதன் காரணமாகவும், தவிசாளர் அமானுல்லாவை பதவி கவிழ்ப்பதற்கு பல உறுப்பினர்கள் விரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் அமானுல்லா மற்றும் சில உறுப்பினர்கள் இணைந்து ஊடக சந்திப்பொன்றை நடத்தினர்.

தவிசாளராக விரும்பும் உவைஸ்

இதில் பேசிய பிரதேச சபையின் மு.கா. உறுப்பினர் உவைஸ்; “தவிசாளர் அமானுல்லாவிடம் கட்சித் தலைவர் பிழைகளைக் கண்டுள்ள போதும், அது தொடர்பில் தலைவரிடம் பேசி பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.

இதேவேளை உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிக்கப்படுமாயின், தவிசாளர் அமானுல்லா உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்றும், அதற்குச் சம்மதித்தால் மட்டுமே, இன்றைய வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்படும் என்றும் உவைஸ் உள்ளிட்ட சில உறுப்பினர் நேற்று முன்வைத்த கோரிக்கைக்கும் அமானுல்லா இணக்கியிருந்தார்.

இந்த விடயத்தினையும் ஊடகவியலாளர்களிடம் உவைஸ் வெளிப்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கிடைத்த தகவல்களின் படி, உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டால் தவிசாளர் பதவியிலிருந்து அமானுல்லாவை பதவி விலக வேண்டும் எனும் கோரிக்கையின் பின்னணியில், அந்தப் பதவியை உறுப்பினர் உவைஸ் கைப்பற்றும் விருப்பம் உள்ளதாக தெரியவருகிறது.

இது இவ்வாறிருக்க தவிசாளர் அமானுல்லாவை பதவி கவிழ்க்க, மு.கா தலைவர் ஹக்கீம் திட்டமிட்டுள்ளமை தொடர்பில் ‘புதிது’ செய்தி வெளியிட்டமையினை அடுத்து, ‘அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்தை வெற்றி பெற வைத்து, தவிசாளர் அமானுல்லாவின் பதவியை பாதுகாப்பதற்காக மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் களமிறங்கியுள்ளார்’ என்று, ஹரீஸின் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் எழுதியிருந்தனர்.

தவிசாளர் அமானுல்லா – மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரை பதவி கவிழ்க்குமாறு ஹக்கீம் உத்தரவு: வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் சூழ்ச்சி ஓட்டமாவடி சந்திப்பில் ஒப்படைப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்