தலைப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெனாண்டோபுள்ளே கொலை வழக்கு: சந்தேக நபர்கள் இருவரும் விடுதலை

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெனாண்டோபுள்ளே உட்பட 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களை நிரபராதிகள் எனக் கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கு இன்று (01) அழைக்கப்பட்டபோதே கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார இவர்களை விடுவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் மொறிஸ் என அழைக்கப்படும் செல்வராஜா திருபாகரன் மற்றும் முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் செனரத் லக்ஷ்மன் குரே ஆகிய சந்தேக நபர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெலிவேரிய மைதானத்துக்கு அருகில் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 06ஆம் திகதி, தற்கொலை குண்டுதாரியை பயன்படுத்தி முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெனாண்டோபுள்ளே உட்பட 16 பேரைக் கொலை செய்தமை, மேலும் 84 பேரைக் கொல்ல சதி முயற்சி செய்தமை உள்ளிட்ட 31 குற்றச்சாட்டுகளின் கீழ்,  மேற்படி இரு சந்தேகநபர்கள் மீது – கம்பஹா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான குற்றச்சாட்டுகளை பரிசீலித்த கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார, சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியுள்ளதாக குறிப்பிட்டு, அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.