அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும், அழையா விருந்தாளிகளும்

🕔 January 8, 2016

DCC - 01– முஹம்மட் –

ட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சுகதார பிரதியமைச்சர் பைசால் காசிம் தலைமை தாங்கினார்.

மேற்படி கூட்டத்துக்கு, குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளையும், திணக்களங்களின் அதிகாரிகளையும் பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா அழைத்திருந்தார். அவ்வாறு அழைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே மண்டப மற்றும் சிற்றுண்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், மேற்படி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அழையா விருந்தாளிகளாக பலர் வந்து உட்கார்ந்திருந்தனர். இது கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு சங்கடத்தினை ஏற்படுத்தியிருந்தது.

இதனால், கூட்டம் ஆரம்பிக்கும் போதே, அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டும் கூட்டத்தில் பங்குபற்றுமாறு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மிகவும் பகிரங்கமாகக் கூறினார். அதாவது, அழைக்கப்படாமல் இங்கு வந்திருப்பவர்கள் எல்லோரும் எழுந்து செல்லுங்கள் என்பதை பிரதேச செயலாளர் நாகரீகமாகக் கூறினார்.

இதேபோன்று, கூட்டத்தில் பங்கேற்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரும், அழைக்கப்படாதவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்பதை பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

ஆயினும், அழையா விருந்தாளிகள் எவருக்கும் அந்த அறிவித்தல்களை காதில் எடுத்துக் கொள்ளவேயில்லை.

குறிப்பாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் சில முன்னாள் உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்தில் காணப்பட்டார்கள். ஆனால், அவர்கள் எவரையும் தாம் அழைக்கவில்லை என்றும், அவர்கள் அழையா விருந்தாளிகளாக வந்துள்ளார்கள் என்றும், கூட்ட ஏற்பாட்டாளர்கள் பேசிக்கொண்டமையை கேட்க முடிந்தது.

இதேபோன்று, வேறு சிலரும் அழையா விருந்தாளிகளாக வந்து சபையில் அமர்ந்திருந்தமையினைக் காணக்கிடைத்தது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பதை, கட்சிக் கூட்டம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் வருகின்ற வினைகளும் – விளைவுகளுமே இவையாகும்.

இனியாவது, இவ்வாறான கூட்டங்களில் அழையா விருந்தாளிகளும், கட்சித் தொண்டர்களும் கலந்து கொள்கின்றமை தவிர்க்கப்படுதல் வேண்டும்.

நேற்று நடைபெற்ற கூட்டத்திலும், அழையா விருந்தாளியாக வந்திருந்த சிலர் அந்தக் கூட்டத்தில் எழுந்து நின்று கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தமையினைக் காணக்கிடைத்தது.

அடுத்த பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினையாவது – அழையா விருந்தாளிகளற்ற, அலுவலக மட்டத்திலானவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் ஒரு கூட்டமாக நடத்துவதற்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசிக் கொண்டனர்.

(படங்கள்: றியாஸ் ஆதம்)DCC - 02DCC - 03

 

Comments