தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்குத் தேவையான எரிபொருளை வழங்க, பிரதேச சபை மாதாந்த கூட்ட அமர்வில் அங்கிகாரம்

– அஹமட் –

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் அத்தியவசியத் தேவைக்குரிய எரிபொருளை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்ட அமர்வில் அங்கிகாரம் கிடைத்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியசாலைக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்கு கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தினால் முடியாத நிலை உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், அட்டாளைச்சேனை பிரதேச சபையிடம் வைத்தியசாலைக்குத் தேவையான எரிபொருளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இவ்விடயத்தில் ‘புதிது’ செய்தித்தளமும் ஆர்வத்துடன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோரிக்கையினைக் கருத்திற் கொண்டு, இது தொடர்பில் சபையின் தீர்மானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இன்றைய (19) கூட்ட அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாதாந்த கூட்ட அமர்வுக்கு முன்னர் இன்று சபை உறுப்பினர்களை பிரதேச சபையில் சந்தித்த ‘புதிது’ செய்தித்தள ஆசிரியர், வைத்தியசாலைக்குத் தேவையான எரிபொருளை வழங்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்தியதோடு, அதற்கு அவர்களின் அங்கிகாரத்தை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் இன்று நடைபெற்ற – மாதாந்த சபைக் கூட்ட அமர்வில் இவ்விடயம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலைகளுக்கும் எரிபொருள் தேவை இருப்பின், அவர்களுக்கும் எரிபொருளை வழங்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

வைத்தியசாலைகளுக்கு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தினால் – மீண்டும் எரிபொருள் வழங்கப்படும் வரை, அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் இவ்வாறு எரிபொருளுக்கான உதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் ஆம்பியுலன்ஸ் மற்றும் பின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) ஆகியவற்றின் இயக்கத்துக்குத் தேவையான எரிபொருளை வழங்குமாறு பிரதேச சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை வைத்தியசாலை ‘ஆம்பியுலன்ஸ்’ வண்டியை இயங்கு நிலைக்குக் கொண்டுவர தனவந்தர்கள் உதவி: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்