அட்டாளைச்சேனை வைத்தியசாலை ‘ஆம்பியுலன்ஸ்’ வண்டியை இயங்கு நிலைக்குக் கொண்டுவர தனவந்தர்கள் உதவி: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

🕔 August 3, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் ஆம்பியுலன்ஸ் வண்டியை இயக்குவதற்கான பட்டறி மற்றும் டீசல் ஆகியவை அன்பளிப்பாளர்களிடமிருந்து கிடைத்த நிதியிலிருந்து இன்று (03) பெற்றுக் கொடுக்கப்பட்டன.

குறித்த ஆம்பியுலன்ஸ் வண்டியின் பட்டறி பழுதடைந்தமை மற்றும் எரிபொருள் இல்லாமை காரணமாக, கடந்த ஒரு மாத காலமாக – ஆம்பியுலன்ஸ் சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

அத்தோடு எரிபொருள் இல்லாமையினால் – மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்களில் வைத்தியசாலையிலுள்ள மின்பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்) இயங்க முடியாத நிலைவரமும் இருந்து வந்தது.

இதனைச் சுட்டிக்காட்டி ‘புதிது’ செய்தித்தளம் நேற்று முன்தினம் (01ஆம் திகதி) செய்தியொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் உள்ளிட்டோரை தொடர்பு கொண்டு ‘புதிது’ செய்தித்தளம் பேசியது.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியசாலைகளுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் சில ஒதுக்கீடுகளை வழங்க முடியாத நிலையில் தாம் உள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் இதன்போது கூறினார்.

இதன் காரணமாக வைத்தியசாலைகளுக்குத் தேவையான இவ்வாறான உதவிகளை அந்தந்த ஊரவர்களே செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் யூ.எல்.எம். வபா, வைத்தியசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் எம்.ஐ.எம். நபீல் மற்றும் குழு உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள தனவந்தர்களை இணைத்து, வைத்தியசாலையில் நிலவும் மேற்படி குறைபாட்டை நிவர்த்திக்கும் முயற்சியொன்றினை ‘புதிது’ செய்தித்தளம் மேற்கொண்டது.

இதற்கமைய நேற்று இரவு அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதேசத்திலுள்ள தனவந்தர்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் வைத்தியசாலையின் அவசரத் தேவை குறித்து பேசப்பட்டமைக்கு அமைவாக, அங்கு வந்திருந்தோர் – ஆம்பியுலன்ஸ் வண்டிக்கு தேவையான பெட்டரியை உடனடியாகக் கொள்வனவு செய்யும் பொருட்டு சுமார் 01 லட்சம் ரூபா நிதி உதவியை வழங்கினர்.

இதன்பின்னர் அட்டாளைச்சேனை அக்ஷா (AQSHA) எரிபொருள் நிலையம் – வைத்தியசாலையின் ஆம்பியுலன்ஸ் மற்றும் ஜெனரோட்டருக்காக 50 லீட்டர் எரிபொருளை இன்று (03) வழங்கியது.

இதனையடுத்து கொள்வனவு செய்யப்பட்ட புதிய பட்டரியை வைத்தியசாலையின் பொதுப்பதிகாரி டொக்டர் வபாவிடம், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் நிதியுதவியளித்தோரில் சிலர் இணைந்து இன்று புதன்கிழமை பிற்பகல் வழங்கி வைத்தனர்.

இதன்போது, இந்த நற்பணிக்காக உதவிய அனைவருக்கும் வைத்தியசாலை பொறுப்பதிகாரி மற்றும் அபிவிருத்திக் குழு செயலாளர் ஆகியோர் நன்றியை தெரிவித்தனர்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு எரிபொருள் இல்லாமையினால் பெரும் அவதி: முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க மறுத்த ‘ஷெட்’ உரிமையாளர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்