அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு எரிபொருள் இல்லாமையினால் பெரும் அவதி: முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க மறுத்த ‘ஷெட்’ உரிமையாளர்

🕔 August 1, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் மற்றும் மின் பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) ஆகியவற்றுக்கு எரிபொருள் இல்லாமையினால் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட்டாளைச்சேனையிலுள்ள ‘மூத்த’ எரிபொருள் நிலையத்தின் (ஷெட்) உரிமையாளரிடம் வைத்தியசாலைக்கு முன்னுரிமைய அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு, வைத்தியசாலை நிருவாகம் கோரிக்கை விடுத்தபோதும் அது நிறைவேற்றப்படவில்லை எனவும், வைத்தியசாலைத் தரப்பினர் கூறுகின்றனர்.

இதனால் மேலதிக சிசிக்சையின் பொருட்டு நோயாளர்களை வேறு வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்வதில் பாரிய பிரச்சினைகளும் காலதாமதங்களும் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, நாளாந்தம் இரவு வேளைகளில் மின் துண்டிப்பு ஏற்படும் போது, வைத்தியசாலை இருளில் மூழ்கி விடுவதாகவும் வைத்தியசாலைத் தரப்பினர் கவலை தெரிவிவிக்கின்றனர்.

இன்று (01) காலை 10.00 மணியளவில் மார்பு வலியுடன் ஒருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரின் ‘ஈசிஜி’ பதிவுகளில் மாற்றங்கள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த நோயாளரை அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்யிருந்தபோதும், அம்பியூலன்ஸ் இல்லாமையினால் வேறு வைத்தியசாலைகளைத் தொடர்பு கொண்டு உதவி கோர நேர்ந்ததாக அங்குள்ள வைத்தியர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் கூறினார்.

இதேவேளை, வைத்தியசாலை ‘அம்பியூலன்ஸ்’யின் பட்டறி பழுதடைந்து விட்டதாகவும், இதனையடுத்து புதிய பட்டறியொன்றை பெற்றுத் தருமாறு கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் காரியாலத்திடம் வேண்கோள் விடுத்தும், அதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவுவும் வைத்தியசாலைத் தரப்பு தெரிவிக்கின்றது.

எனவே, இவ் விடயங்கள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இது தொடர்பில் அறிந்த பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்