தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனையில் 24 மணிநேரம் இயங்க வேண்டிய அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ள எரிபொருள் நிலையம், அவ்வாறு செயற்படுவதில்லை எனப் புகார்

– அஹமட் –

அட்டாளைச்சேனையிலுள்ள எரிபொருள் நிலையமொன்று 24 மணிநேர சேவை வழங்கும் வகையிலான அனுமதிப் பத்திரத்தைக் கொண்டுள்ளபோதும், அந்த எரிபொருள் நிலையம் 24 மணிநேரமும் இயங்குவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

குறித்த எரிபொருள் நிலையம் காலை திறக்கப்பட்டு, பின்னர் மதிய உணவுக்காக பகல் 1.00 மணிக்கு மூடப்பட்டு, மீண்டும் 3.00 மணிக்குப் பின்னர் திறக்கப்படுவது வழமையாகும்.

பின்னர் இரவு 8.00 மணியுடன் இந்த எரிபொருள் நிலையம் தனது கடமைகளை முடித்துக் கொள்ளும். அதன் பின்னர் சாதாரண நாட்களில் இரவு வேளைகளில் எரிபொருள் கோருவோருக்கு அங்கு எரிபொருள்கள் வழங்கப்படுவதில்லை.

ஆனாலும் இந்த எரிபொருள் நிலையம் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, அந்த எரிபொருள் நிலையம் 24 மணிநேரம் இயங்கத் தொடங்கினால், அங்கு கடமையாற்றும் பணியாளர்களை 08 மணித்தியாலங்களுக்கு ஒருமுறை (Shift அடிப்படையில்) மாற்ற வேண்டும்.

24 மணிநேர சேவையினை வழங்குவதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொண்டு, கிட்டத்தட்ட 12 மணி நேரம் மட்டுமே இயங்கும் இந்த எரிபொருள் நிலையம் குறித்து, மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாணத்துக்கான பிராந்தியக் காரியாலயத்தை தொடர்புகொண்டு முறையிடலாம். அதற்கான தொலைபேசி இலக்கம்: 0652224429 / 0655670160

இதேவேளை 24 மணிநேரமும் இயங்க வேண்டிய எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் எவை என்பதை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தினுள் சென்று பார்வையிடலாம். அதற்கான லின்க்: https://ceypetco.gov.lk/24-hour-service/

எரிபொருள் நிலையங்களில் மின்சாரம் தடைப்படும் போது ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செயற்படாத எரிபொருள் நிலையங்கள் குறித்து முறையிடலாம் எனவும் ‘புதிது’ செய்தித்தளம் அண்மையில் செய்தி வெளியிட்டமையினை அடுத்து, பல எரிபொருள் நிலையங்களில் ஜெனரேட்டர்கள் பாவனைக்கு வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.