
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொருட்டு, நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பின் போது, ஜனாதிபதி வேட்பாளராக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
அந்தக் கட்சியின் செயலாளர் சாகல காரியவசம் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இன்று (15) தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் படி, நாடாளுமன்றம் நாளை (16) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.
1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 4 ஆவது பிரிவின்படி, வெற்றிடம் ஏற்பட்ட பின்னர் பாராளுமன்றம் மூன்று நாட்களுக்குள் கூட்டப்பட வேண்டும்.
இதனால், மேற்படி சட்டத்தின் 5ஆவது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் இருப்பதாக பொதுச் செயலாளர் நாளை (16) அறிவிக்க உள்ளார்.
இதேவேளை, இன்று முற்பகல் 10.00 மணிக்கு இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் முன்னர் தீர்மானித்தபடி எதிர்வரும் 20ஆம் திகதி – புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றம் தெரிவுசெய்யும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெறும் தேர்தலின் பின்னர் ஜனாதிபதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
ஜனநாயகக் கட்டமைப்பிற்குள், எவ்வித இடையூறும் இன்றி இந்த செயற்பாட்டை விரைவாக முன்னெடுக்க அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் பதில் ஜனாதிபதியாக இன்று ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.



