தாஜுதீன் கொலைச் சந்தேக நபர் திஸ்ஸ, வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி

🕔 December 26, 2015

Wazeem Thajudeen - 098பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரெனக் கருதப்படும் கெப்டன் திஸ்ஸ என்பவர், நாட்டை விட்டுக் கடல் வழியாகத் தப்பிச் செல்ல முற்பட்டார் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடற்படையைச் சேர்ந்த அதிகாரியொருவர், கெப்டன் திஸ்ஸ என்பவருக்கு துணையாக இருந்து வருகின்றமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீண்ட நாள் ஆதரவாளரும் வாகன சாரதியுமான மேற்படி கெப்டன் திஸ்ஸ என்பவர், வெளிநாடுகளுக்குப் பிரயாணம் செய்வதற்கான தடையை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஏற்கெனவே பெற்றிருந்தது.

இதேவேளை. தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியாதவாறு, குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இயங்கி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கெப்டன் திஸ்ஸவுக்கு கொழும்பில் 05 வீடுகள் உள்ளதாகவும், அவர் எங்கிருக்கின்றார் என்பது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மேற்படி சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

தாஜுதீன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாரென்பது அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவர்களைக் கைது செய்வதற்கு சிறிது கால அவகாசம் தேவை என்று, விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தாஜூ தீன் தொடர்புடைய வழக்கு, ஜனவரி மாதம் 20ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னர், சந்தேக நபர்கள் அறுவரும் கைது செய்யப்படுவர் என்றும் அறிய முடிகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்