அறிவுக்கு ஆயிரம் கண்கள்: பார்வையற்ற மாணவன் ஆஷிப்பின் சாதனைக் கதை

🕔 March 23, 2022

– மப்றூக் –

பார்வையில்லாதவர்களின் உலகம் இருள்மயமானது. சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தால் அதனை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.  அவ்வாறானதொரு உலகில், தனது அறிவாற்றல் மூலம் விளக்கொன்றை ஏற்றத் தொடங்கியிருக்கிறார் – இலங்கையின் அம்பாறைமாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள ‘றியாழுல் ஜன்னாஹ்’ பாடசாலையில் கற்கும் பார்வையற்ற மாணவன் ஏ.ஆர். ஆஷிப்,

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற – ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று சாதனை படைத்ததன் மூலம், அவர் அவதானிக்கப்பட்டுள்ளார், அவரின் உலகம் வெளிச்சமடையத் தொடங்கியுள்ளது.

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் கற்கும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ‘புலமைப் பரிசில் பரீட்சை’ எனும் பெயரில், பொதுப் பரீட்சையொன்றினை அரசு நடத்துகின்றது. இதில் சித்தியடையும் – வருமானம் குறைந்த மாணவர்களுக்கு அவர்களின் 18 வயது வரையிலும் ஊக்கத் தொகையொன்றை அரசு வழங்குகின்றது. அதேவேளை, சித்திபெறும் மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளுக்கு அமைய, அவர்களின் பெற்றோர் தெரிவுசெய்யும் பிரபல பாடசாலையில் சேர்ந்து கற்பதற்கான சர்தர்ப்பத்தினையும் அரசு வழங்கி வருகிறது..

ஆஷிப்

நாடளாவிய ரீதியில் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில், 10 சதவீதத்தினரைத் தெரிவு செய்யும் வகையில், அவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் மாவட்ட ரீதியாக அறிவிக்கப்படும். 

அந்த வகையில் இம்முறை அம்பாறை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய விசேட தேவையுடைய மாணவர்கள் சித்தியடைவதற்கான வெட்டுப் புள்ளி 100 ஆக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பார்வையற்ற மாணவன் ஆஷிப் 135 புள்ளிகளைப் பெற்று சாதணை படைத்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகின.    

ஆஷிப் – அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர். இவருக்கு 12 வயதாகிறது. ஆஷிப் பிறந்து 02 மாதங்களான போது, அவர் பார்வையை இழந்ததாக, ஆஷிப்பினுடைய பெற்றோர் கூறுகின்றனர்.

ஆஷிப்பின் தந்தை அப்துல் றஹீம் – அரச பணியாளர். பாடசாலையொன்றில் சிற்றூழியராக கடமையாற்றுகின்றார். தாய் உம்மு சல்மா – வீட்டுத் தலைவியாக உள்ளார். ஆஷிப்புக்கு மூத்த சகோதரியொருவர் உள்ளார். அவர் இம்முறை நடைபெற்ற 12ஆம் வகுப்பு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி விட்டு, முடிவுக்காகக் காத்திருக்கின்றார்.

ஆஷிப் கல்வி கற்கும் ‘றியாழுல் ஜன்னாஹ்’ பாடசாலை – கல்முனை கல்வி வலயத்தில் அமைந்துள்ளது. இந்த வலயத்தில் விசேட கல்வி அலகுகள் 06 உள்ளன என்றும், அவற்றில் 145 விசேட தேவையுடைய மாணவர்கள் கற்கின்றனர் எனவும் – கல்முனை வயலக் கல்வி அலுவலகத்தில் விசேட கல்விக்குப் பொறுப்பாகவுள்ள ஆசிரிய ஆலோசகர் எம்.எம். சியாம் கூறுகின்றர். அதேபோன்று விசேட அலகுகள் இல்லாத பாடசாலைகளிலும் விசேட தேவையுடைய மாணவர்கள் ‘உட்படுத்தல் கல்வி’ (Inclusive Education) செயற்பாட்டின் ஊடாக கற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சியாம் – ஆசிரிய ஆலோசகர்

ஆஷிப் ஏற்கனவே வேறு பாடசாலையொன்றுக்கு போய்வந்த  நிலையில்தான் 2018ஆம் ஆண்டு – தற்போது அவர் கல்வி கற்கும் பாடசாலையில் இணைந்துள்ளார்.

‘றியாழுல் ஜன்னாஹ்’ எனும் இந்தப் பாடசாலை 1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஐந்தாம் வகுப்பு வரையில்தான் இங்கு உள்ளது. சுனாமியின் போது முழுவதுமாக சேதமடைந்த இந்தப் பாடசாலை, பின்னர் மீள் நிர்மாணிக்கப்பட்டது. இங்கு 250 மாணவர்கள் கற்கின்றனர். இங்குள்ள விசேட தேவையுடையோருக்கான பிரிவில் 25 மாணரவர்கள் கற்கின்றனர்.

மாணவனுக்காக ‘பிரைல்’ கற்றுக் கொண்ட  ஆசிரியை

‘றியாழுல் ஜன்னாஹ்’ பாடசாலையிலுள்ள விசேட தேவையுடையோருக்கான பிரிவில் கற்கும் மாணவர்களில் ஆஷிப் மட்டுமே பார்வையற்றவர். அதனால், அவருக்கென ஏ.ஆர். ஹுசைன் பீபி எனும் ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டு, அவரின் கண்காணிப்பின் கீழ், ஆஷிப் கற்று வருகின்றார்.  

“ஆஷிப் இங்கு வந்தபோது, அவர் மூன்றாம் வகுப்பில் கற்க வேண்டிய வயது. ஆனால், அவர் எழுதவோ வாசிக்கவோ தெரியாதிருந்தார். பார்வையற்றவர்கள் எழுதி வாசிக்கும் ‘பிரைல்’ (Braille) எழுத்துக்கள் பற்றி அவர் எதுவும் தெரியாதிருந்தார். எனவே, முதலாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கற்றுக் கொடுப்பது போல், அனைத்தையும் முதலில் இருந்து அவருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது” என்கிறார் ஆஷிப்பின் ஆசிரியை ஹுசைன் பீபி.

‘பிரைல்’ எழுத்துக்கள் பற்றி ஆசிரியை ஹுசைன் பீபி மிகக் குறைந்தளவே அறிந்திருந்ததாகக் கூறுகின்றார். “ஆஷிப்புக்காக ‘பிரைல்’ எழுத்துக்களை நன்றாக வாசிக்கவும் எழுதவும் நான் கற்றுக் கொண்டேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

ஹுசைன் பீபி – ஆஷிப்பின் ஆசிரியை

“ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சை எழுத வேண்டும் என்பது ஆஷிபின் விருப்பமாக இருந்தது. அதற்காக அவரைத் தயார் படுத்த மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. எனது பாடசாலையின் முன்னாள் மற்றும் தற்போதைய அதிபர்கள், சக ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர் மற்றும் ஆஷிப்பின் பெற்றோர் வழங்கிய உதவியுடன் அதனை நான் செய்தேன்” என்கிறார் ஆசிரியை ஹுசைன் பீபி.  

“கற்றலுக்கு மூலதனம் ஞாபக சக்தி. அது ஆஷிபிடம் அதிகமாகவே உள்ளது. ‘பிரைல்’ எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்த போது அவற்றினை அவர் மிக விரைவாகப் புரிந்து கொண்டார். ஒரு பூ மலர்வதற்கு முன்னர் காட்டும் அறிகுறிகளைப் போன்று, அவரிடமிருக்கும் அறிவை அவர் வெளிப்படுத்த ஆரம்பித்தார்” என, ஆஷிப்பின் திறமைகள் குறித்து மகிழ்வுடன் விவரித்தார் ஆசிரிய ஆலோசகர் சியாம்.

பாடங்களில் மட்டுமன்றி பாடுதல், பேசுதல் உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளிலும் ஆஷிப் திறமையானவர் என்று அவரின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

விரல்களே கண்கள்

”நாங்கள் கண்களால் கற்கின்றோம், ஆஷிப் விரல்களால் கற்கின்றார். நாங்கள் சொல்வதைக் கேட்டு எழுதி, அந்த எழுத்துக்களைத் தொட்டுணர்ந்து வாசிக்கும் போது, அவருக்கு விரல்களே கண்ணாகின்றன” என்கிறார் ஆஷிப்பின் பாடசாலை அதிபர் ஏ.முகம்மட் அன்சார்.

”ஆஷிப்பின் ஆசிரியை ஹுசைன் பீபி, விசேட தேவையுடைய மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான பயிற்சிகைளப் பெற்றவர். அவர் அந்த மாணவனுக்கு பாடங்களைக் கற்றுக் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல், தன்னுடைய பிள்ளையைப் போல – அவர் ஆஷிப்பை கவனிக்கும் பாங்கு மகிழ்ச்சிக்குரியதாகும். ஒரு பட்டாம் பூச்சியைக் கையில் பிடிப்பது போல், ஆசிப்பை அரவணைத்துக் கொண்டு, அவருக்கு இந்த உலகத்தை ஆசிரியை ஹுசைன் பீபி – வார்த்தைகளால் காட்டினார்” என, அதிபர் அன்சார் மகிழ்சியுடன் தெரிவிக்கின்றார்.

”ஒரு பறவை – கூட்டில் இருப்பதைப் போல், இங்கு இருப்பதை ஆஷிப் உணர்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நானும் அதனை ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பேன். ஆஷிப்பை சாதாரண மாணவர்களின் வகுப்பில் வைத்தும் கற்றுக் கொடுத்தோம். அதனை ‘உட்படுத்தல் கல்வி’ (Inclusive Education) என்பார்கள். அப்போது சாதாரண வகுப்பு மாணவர்களை விடவும் ஆஷிப் – கூடுதலான துலங்களை வெளிப்படுத்தினார். அந்த வகையில், இவர் விசேட நுண்ணறிவுடைவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறான விசேட தேவையுடைய மாணவர்களிடம் நாம் அனுதாபம் காட்டத் தேவையில்லை, அக்கறை காட்டினால் மட்டும் போதுமானது” எனவும் அதிபர் அன்சார் குறிப்பிட்டார்.

அன்சார் – அதிபர்

சவால்களும் தேவைகளும்

“ஆஷிப் ‘பிரைல்’ எழுத்துக்களில் கற்பதால், எழுதுவதற்கான கடதாசி அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு அதிக பணம் செலவாகிறது. ‘பிரைல்’ எழுத்து மட்டையொன்றின் விலை தற்போது 11 ரூபா. நாளொன்றுக்கு ஆகக் குறைந்தது 30 கடதாசி அட்டைகள் அவருக்குகுத் தேவைப்படும். இதனை ஈடுசெய்வதற்கு பெற்றோரின் வருமானம் போதாது. அதனால் நாங்கள் பழைய புத்தகங்களை எடுத்து அவற்றின் இரண்டு தாள்களை ஒன்றாக ஒட்டி, அவற்றினை ஆஷிப்புக்கு நாம் வழங்கினோம்” என, ஆஷிப் எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் குறித்து ஆசிரியை ஹுசைன் பீபி விளக்கமளித்தார்.

இப்போது ஆஷிப் 06ஆம் வகுப்புக்குச் செல்லவுள்ளார். அவர் கற்கும் பாடசாலையில் 05ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளதால், அவர் வேறு பாடசாலையொன்றுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையில் அவர் கற்பதை இலகுபடுத்துவதற்காக அவருக்கு மடிக்கணிணியொன்று தேவையாக உள்ளது என்கிறார் – அவரின் தந்தை. வகுப்பில் கற்றுக் கொடுப்பதை ஒலிப்பதிவு செய்து, பின்னர் அவற்றினை கேட்டுக் கற்பதற்கு ஆஷிப் பயன்படுத்தி வந்த ஒலிப்பதிவுக் கருவியும் பழுதடைந்து விட்டதால், அதனையும் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கற்றுக் கொள்வதில் ஆஷிப் காட்டும் ஆர்வம் வியப்பளிக்கின்றது. வாசிப்பதில் அவருக்குள்ள ஆர்வத்தை அவர் சிலாகிப்புடன் சொல்லும் போது, அந்த சிலாகிப்பு நமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது. ஆஷிப்பை நாம் சந்தித்துப் பேசியபோது; வாசிப்பதிலும், கதைகளைப் படிப்பதிலும் அவருக்கிருக்கும் பேரார்வத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். பாடும் திறமையையினையும் வெளிப்படுத்தினார்.

பார்வையற்ற உலகில், தனது அறிவாற்றல் மூலம் ஆஷிப் – விளக்கொன்றை ஏற்றத் தொடங்கியிருக்கிறார். அந்த விளக்கு ஒரு சூரியனாக மாற வேண்டும், அதற்கான உதவிகளும், அருளும் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதே, அவரைச் சுற்றியுள்ளவர்களின் பிரார்த்தனைகளாகும்.    

ஆஷிப்பின் பெற்றோர்
விசேட பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்களுடன் அதிபர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்