பெற்றோல், டீசல் விநியோகத்தின் போது, தாம் எதிர்கொள்ளும் நஷ்டம் குறித்து பெற்றோலிய கூட்டுத்தபானம் விவரிப்பு

🕔 March 11, 2022

டீசல் விலையை 88 ரூபாவால் அதிகரிக்க நேரிடும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்கான விலை அதிகரித்துள்ளமை காரணமாக, இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்குமா என கேட்கப்பட்டமைக்கு பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க; இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு தற்பொழுது ஒரு லீற்றர் 128 ரூபாயும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 80 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

எரிபொருள்களுக்கான விலைகளை அதிகரிக்காமல் சூழ்நிலையை நிர்வகிப்பது கடினமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் சாதாரண முறையில் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வால், உள்நாட்டிலும் விலை உயரலாம் என்ற அச்சத்தில் நுகர்வோர்கள் எரிபொருளை வாங்கும் போக்கு காணப்படுவதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மிக அதிக தொகையான டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும், இந்த நேரத்தில் எரிபொருள் பாவனையை சரியான முறையில் நிர்வகிப்பதே நாட்டுக்கு நல்லது எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்