சண்டியர்களின் கூடாரம்

🕔 December 15, 2015

Mujibur Rahman - 09222
நா
ட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றமானது, சண்டியர்களின் கூடாரமாக மாறத் துவங்கியுள்ளதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டவாக்க சபை, சண்டியர்கள் கூடிக் கலையும் இடமாக மாறுவதென்பது, தேசத்துக்கு மிகப் பெரும் இழுக்காகும். கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை, ஐ.ம.சு.கூட்டணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் வைத்தே தாக்கிய அல்லது தாக்க முயற்சித்த சம்பவத்தினூடாக, நமது நாடாளுமன்றம் குறித்து மக்கள் கொண்டிருந்த எண்ணக் கருவில் – மீண்டுமொரு தடவை கறை விழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதம் நடைபெற்றது. இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் உரையாற்றினார். அவர் தனது உரையில், இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட ஜெனீவா அறிக்கை பற்றி பேசினார். யுத்தத்தின் போது, இலங்கை ராணுவத்தினர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, ஜெனீவா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

பின்னர், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன்போது, நாமல் ராஜபக்ஷ தெரிவித்த திட்டமிடப்பட்ட குற்றம் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார். இலங்கையின் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீனும், திட்டமிடப்பட்ட குற்றச் செயல் மூலமாகவே கொல்லப்பட்டார் என்றும், அந்தக் கொலையினைப் புரிந்தவர்கள் இந்த சபையில் உள்ளனர் என்றும் முஜிபுர் ரஹ்மான் இதன்போது கூறினார்.

இந்த நேரத்தில்தான் அந்த அசிங்கம் அரங்கேறியது.

சண்டித்தனம்

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேற்கண்ட விடயங்களைக் கூறிக்கொண்டிருக்கையில், எதிரணியில் அமர்ந்திருந்த ஐ.ம.சு.கூட்டணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரிதாக சத்தமிட்டுக் கொண்டு, தங்கள் ஆசனங்களில் இருந்து எழுந்தனர். வசீம் தாஜுத்தீன் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக உள்ளமையினால், அது குறித்துப் பேசக் கூடாது என்று கோசமிட்டனர். முஜிபுர் ரஹ்மான் அமர்ந்திருந்த ஆளுந்தரப்புப் பக்கமாக அவர்கள் சென்றனர். முஜிபுர் ரஹ்மானை தாக்குவதற்கு முயற்சித்தனர். அங்கிருந்த புத்தகங்களை எடுத்து முஜிபுர் ரஹ்மானை நோக்கி வீசினர். இதனால், நாடாளுமன்றம் கலவர நிலைக்குள்ளானது.

தன்னை இவ்வாறு தாக்குவதற்கு முயற்சித்தவர்களில் மூன்று பேர், தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக, முஜிபுர் ரஹ்மான் பின்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ஐ.ம.சு.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெனாண்டோ (குருணாகல் மாவட்டம்), சனத் நிஷாந்த பெரேரா (புத்தளம் மாவட்டம்), இந்திக அநுருத்த ஹேரத் (கம்பஹா மாவட்டம்) ஆகியோரே தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மானைத் தாக்கிய அல்லது தாக்குவதற்கு முயற்சித்த காட்சிகள், இணையங்களில் வெளியாகியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக, முஜிபுர் ரஹ்மான் பெயர் குறித்துச் சொன்ன மேற்படி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசிகளாவர். மேலும், சனத் நிஷாந்த பெரேரா மற்றும் இந்திக அநுருத்த ஹேரத் ஆகியோர் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புபட்ட சந்தேக நபர்களாக உள்ளனர். இவர்கள் மீது வழங்குகளும் பதிவாகியுள்ளன.

யார் இந்த சனத் நிஷாந்த

ஐ.ம.சு.கூட்டணி சார்பாக, புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானவர்தான் இந்த சனத் நிஷாந்த பெரேரா. நாடாளுமற்றுக்கு வருவதற்கு முன்னர் வடமேல் மாகாண மீன்பிடி, விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்தவர். வடமேல் மாகாண அமைச்சர் பதவியில் இருந்தபோது, இவர் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகளின் பேரில், கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி, ஆனமடுவ பொலிஸார் இவரைக் கைது செய்தனர். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட, அப்போதைய வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின், ஆனமடுவ – கராயக்கம எனும் பகுதியில் அமைந்திருந்த அலுவலகத்தினை சனத் நிஷாந்த பெரேரா தாக்கி, அங்கிருந்த சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, நபர் ஒருவரை அச்சுறுத்தினார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில்தான், கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதியன்று ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சனத் நிஷாந்த பெரேராவை, பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் உள்ள நிலையில், மேற்படி சனத் நிஷாந்த பெரேரா கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிரான நீதிமன்ற வழக்கொன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், அவர் ஆஜராகாமல் விட்டமையினால், சனத் நிஷாந்த மீது, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, வாக்களிப்பு நிலையமொன்றில் பிரச்சினை ஏற்படுத்தியதாகவும், பொலிஸார் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் சனத் நிஷாந்த பெரேரா ஆராய்ச்சிகட்டுவ பிரதேச சபை உறுப்பினராகப் பதவி வகித்தார். இந்த வழக்கில் ஆஜராகத் தவறிமை காரணமாகவே, இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவர் கைது செய்யப்பட்டார்.

இந்திக அநுருத்த ஹேரத்

முஜிபுர் ரஹ்மானுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அநுருத்த ஹேரத் என்பவரும், இவ்வாறான பல குற்றச்சாட்டுகளோடும், வழக்குகளோடும் தொடர்புபட்டவராவார்.

இந்திக அநுருத்த ஹேரத் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர், திவுல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்தவர். இவர் கொட்டதெனியாவ எனும் இடத்தில் வைத்து நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேபோன்று, உடுகொடவத்த மற்றும் தம்மித்த பிரதேசங்களில் வைத்து நபர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில், இந்திக அநுருத்த ஹேரத்தினை கடந்த ஜனவரி 12 ஆம் திகதி மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்தது.

முஜிபுர் ரகுமானுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ குறித்து வாசகர்கள் நன்கு அறிவர்.

ஒழுக்கம்

நாடாளுமன்றத்தில் உறுப்பினரொருவர் ஆற்றும் உரை குறித்து, ஏனைய உறுப்பினர் எவராவது அதிருப்தியினை அல்லது மாறுபட்ட கருத்தினை உடையவராக இருப்பாராயின், அந்த அதிருப்தியினை வெளிப்படுத்துவதற்கு முறையான ஒழுக்க முறைகள் நாடாளுமன்றத்தில் உள்ளன.

முஜிபுர் ரஹ்மான் பேசியபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர், தமது அதிருப்தியினை வெளிப்படுத்துவதற்குரிய முறையான ஒழுங்கு முறைகளைப் பின்பற்றவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சண்டியர்கள் போல் கூச்சலிட்டுக் கொண்டு, கையை முறுக்கியவாறு, முஜிபுர் ரஹ்மானை நோக்கி இவர்கள் சென்றமையானது கேடுகெட்ட செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது.

மேலே பெயர் குறிப்பிடப்பட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சிரேஷ்ட அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தனவும், முஜிபுர் ரஹ்மானை அச்சுறுத்துவது போல் விரல் காட்டிக்கொண்டே, சத்தமிட்டவாறு முன்னோக்கிப் பாய்ந்து சென்றமையினைக் காணக் கிடைத்தபோது, வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை.

தாஜுதீனைக் கொன்றவர்கள்

‘வசீம் தாஜுத்தீனைக் கொன்றவர்கள் இந்த சபையில் உள்ளனர்’ என்று, முஜிபுர் ரஹ்மான் பேசியமையினைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள், முஜிபுர் ரஹ்மான் மீது, பொய்யாக எதையாவது கூறி, பழி சுமத்த வேண்டும் என்கிற நோக்கிலும் நடந்து கொண்டனர்.

வசீம் தாஜுத்தீனைக் கொன்றவர்கள் எனத் தெரிவித்து, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தவர்களின் பெயரை முஜிபுர் ரஹ்மான் சபையில் கூறியதாக, பிரச்சினையில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டொன்றினை முன்வைத்தனர். இதனையடுத்து, முஜிபுர் ரஹ்மானுடைய உரையின் வீடியோ பதிவினை சபாநாயகர் பார்வையிட்டார். அந்த வீடியோவில் வசீம் தாஜுத்தீனைக் கொன்றவர்கள் என்று, முஜிபுர் ரஹ்மான் – எவரின் பெரையும் குறிப்பிடவில்லை என்பதால், மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள் பொய்யாகிப் போயின.

அடுத்து, வசீம் தாஜுத்தீனைக் கொன்றவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்கள் என, முஜிபுர் ரஹ்மான் கூறிய விவகாரத்தினை, முஜிபுர் ரஹ்மானுக்கு எதிரானவர்கள் தூக்கிப் பிடித்தனர். அந்த வாசகங்களை, நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பான ‘ஹான்சாட்’டில் இருந்து நீக்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைக் கவனத்திற்கொண்ட சபாநாயகர், ‘வசீம் தாஜுத்தீனைக் கொன்றவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்கள்’ என, முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த வாசகங்களை ‘ஹான்சாட்’டில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.

கிளைக் கதை

இந்தக் கட்டுரையோடு தொடர்புபடக்கூடிய, வேறொரு சம்பவத்தினையும் இங்கு எழுத வேண்டியுள்ளது. இந்த மாதம் 04 ஆம் திகதி நாடாளுமன்றில் நீதி மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் உரையாற்றினார். அவருக்கு 10 நிமிடங்கள் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆயினும் அவர் 11 நிமிடங்களும் 50 விநாடிகளும் உரையாற்றினார். குறித்த உரையினை ஆரம்பித்து சரியாக 07 ஆவது நிமிடம் 43 ஆவது விநாடியின்போது, ‘மகேஷ்வரனைப் படுகொலை செய்த சூத்திரதாரி, இன்று மீண்டும் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்’ என்று ராஜாங்க அமைச்சர் விஜயகலா கூறினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தனது கணவருமான மகேஷ்வரனின் மரணம் தொடர்பிலேயே, ராஜாங்க அமைச்சர் விஜயகலா அவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் அப்படிக் கூறியபோது, சபை அமைதியாக இருந்தது. விஜயகலாவின் அந்தக் கூற்றுக்கு எதிராக யாரும் அப்போது குரல் எழுப்பவில்லை. ‘ஹான்சாட்’டிலிருந்து விஜயகலாவின் அந்த வார்த்தைகள் அகற்றப்படவுமில்லை.

அளவான தொப்பி

ஆனால், ‘வசீம் தாஜுத்தீன் கொலையோடு தொடர்புபட்ட சூத்திரதாரிகள் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்கள்’ என்று முஜிபுர் ரஹ்மான் கூறியதும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் கொதித்தெழுந்தார்கள்? மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப அங்கத்தவர்களின் பெயரை இதன்போது முஜிபுர் ரஹ்மான் பயன்படுத்தியதாக ஏன் அவர்கள் புகார் கூறினார்கள்? அந்த வாசகங்களை ‘ஹான்சாட்’டிலிருந்து நீக்க வேண்டுமென்று ஏன் அடம் பிடித்தார்கள்? என்கின்ற கேள்விகளைக் கேட்டுப் பார்த்தால், அவற்றுக்குப் பின்னால், ஏராளமான உண்மைகள் இருப்பதை கண்டு கொள்ள முடியும். வசீம் தாஜுத்தீன் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் வீசிய ‘தொப்பி’களை, மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தலைகளுக்கு அளவாக இருந்தமையினால், எடுத்துப் போட்டுக் கொண்டார்கள் என்று, ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கூறிக் கொண்டமையினையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.

சட்டம்

வசீம் தாஜுத்தீன் மரணம் தொடர்பாக, நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமையினால், அது குறித்துப் பேச முடியாது என்று, மஹிந்த தரப்பு அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த புகார் தொடர்பில், சட்ட முதுமானியும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பரிடம் நாம் பேசினோம்.

‘நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள ஒரு வழக்குத் தொடர்பில் விமர்சிக்கக் கூடாது என்பது பொதுவானதொரு நியதியாகும். நீதிமன்றில் விசாரிக்கப்படும் வழக்குத் தொடர்பாக பொது வெளியில் விவாதிக்கும்போது, அந்த விவாதத்திலுள்ள கருத்துக்கள், சம்பந்தப்பட்ட வழங்கினை விசாரணை செய்யும் நீதிபதிகளின் மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும். அதனால்தான், நீதிமன்றத்திலுள்ள வழக்குகள் குறித்து பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது என்பர். ஆனால், வசீம் தாஜுத்தீன் மரணம் பற்றிய விவகாரம் தற்போது நீதிமன்றில் புலனாய்வு நிலையில்தான் உள்ளது. அதனால், அது குறித்து முஜிபுர் ரஹ்மான் பேசியதில் பிழையொன்றுமில்லை’ என்றார் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்.

‘ஒரு வழக்குத் தொடர்பில், சட்டம் செயற்பட வேண்டிய விதம் குறித்தும், பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் விவாதிக்க முடியும். ஆனால், நீதவானின் செயற்பாடுகள் தொடர்பில் பேச முடியாது. மேலும், நாடாளுமன்றத்துக்கு விசேட வரப்பிரசாதங்கள் உள்ளன என்பதற்காக, நீதிமன்றத்தில் நடக்கின்ற வழக்கு விசாரணைகள் தொடர்பில் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது’ என்றும் நிஸாம் காரியப்பர் விபரித்தார்.

‘இருந்தபோதிலும், வசீம் தாஜுத்தீன் மரணம் என்பது அரசியல் சார்ந்த ஒரு விவகாரமாக மாறியுள்ளமையினாலும், இது குறித்துப் பேசுவதற்கு முஜிபுர் ரஹ்மான் உரித்துடையவராகிறார்’ என்று சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நம்மிடம் கூறினார்.

இதேவேளை, தான் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சனிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் முஜிபுர் ரஹ்மான் சிறப்புரிமை குறித்த புகார் ஒன்றினை முன்வைத்தார். இதனைக் கருத்திற்கொண்ட சபாநாயகர், முஜிபுர் ரஹ்மான் அச்சுறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வேறொரு கோணம்

இன்னொருபுறம் முஜிபுர் ரஹ்மான் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், பிரதம மந்தரி ரணில் விக்கிரமசிங்க வேறொரு கோணத்தில் கருத்தொன்றினை முன்வைத்துள்ளார்.

‘மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களை தாக்கினீர்கள். அதற்கு நாம் முற்றுப் புள்ளி வைத்த பிறகு, அந்தச் சண்டித்தனத்தை இப்போது சபைக்குள் காட்டி, முஸ்லிம் நாhடாளுமன்ற உறுப்பினரை தாக்க வருகின்றீர்கள். இதனை அனுமதிக்க முடியாது’ என்று நாடாளுமன்றில் தெரிவித்த பிரதமர், ‘முஜிபுர் ரஹ்மான் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார்.

முஜிபுர் ரஹ்மான் மீதான தாக்குதல் நடவடிக்கையானது பாரதூரமான விடயமாகும். நடப்பது நல்லாட்சி என்று பலரும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தினுள் வைத்தே, மஹிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாத கருத்தொன்றினைத் தெரிவித்த சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் சண்டித்தனம் காட்டி, அவரைத் தாக்க முற்பட்டிருப்பது ஆபத்தானதொரு விவகாரமுமாகும்.

முஜிபுர் ரஹ்மான் மீது சண்டித்தனம் காட்டியவர்கள் மீது நாடாளுமன்றமும், அவர்கள் சார்ந்த கட்சியும் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையானது, நாடாளுமன்றத்தில் சண்டித்தனம் காட்டுவதற்கு நினைக்கின்ற உறுப்பினர்களுக்கு ஓர் அச்சம் நிறைந்த பாடமாக அமைய வேண்டும்.

நமது அதியுயர் சட்டவாக்க சபையான நாடாளுமன்றம், சண்டியர்களின கூடாரமாகி விடக் கூடாது என்று, இந்த நாட்டை நேசிக்கும் பிரஜைகளாக ஒரு தடவை பிரார்த்தித்துக் கொள்வோம்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (15 டிசம்பர் 2015)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்