“அதிபரும் விரிவுரையாளர்களும் என்னைப் பாதுகாத்தனர்”: ஹிஜாப் அணிந்தமைக்காக, கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட மாணவி பீபி முஸ்கான் பிரத்தியேகப் பேட்டி

🕔 February 9, 2022

ந்தியா – கர்னாடகாவிலுள்ள கல்லூரியொன்றில் கற்கும் பீபி முஸ்கான் எனும் முஸ்லிம் மாணவி – ஹிஜாப் அணிந்து வந்தமைக்காக, கல்லூரிக்குள் நுழைய விடாமல் ஜெய்ஸ்ரீராம் எனும் கோசமிட்டு வந்த சிலரால் தடுக்கப்பட்டபோது; தன்னை கல்லூரியின் அதிபரும் அனைத்து விரிவுரையாளர்களும் பாதுகாத்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இயங்கும் என்.டி.ரி.வி (NDTV) தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில் அவர் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இதனைக் கூறினார்.

கல்லூரிக்குள் தன்னை நுழைய விடாமல் தடுப்பதற்கு முயற்சித்தவர்களில் 10 வீதமானவர்களே கல்லூரி மாணவர்கள் என்றும், ஏனையோர் வெளியாட்கள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

உங்களைச் சுற்றி இளைஞர்களும் ஆண்களும் சுற்றி வளைத்தபோது, நீங்கள் அச்சப்பட்டீர்களா என, இதன்போது அவரிடம் வினவப்பட்டதற்கு; “இல்லை” என அவர் பதிலளித்தார்.

வர்த்தகத்துறையை (B.Com) கற்கும் இரண்டாம் வருட மாணவி முஸ்கான், ‘அசைமென்ற்’ (assignment) ஒன்றை சமர்ப்பிப்பதற்காக புர்கா அணிந்து கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தபோது, தான் தடுக்கப்பட்டதாக கூறினார்.

தன்னைச் சுற்றிவளைத்தவர்கள் ‘ஜெய்ஸ்ரீராம்’ எனக் கோஷமிட்டதாகவும், அதன்போது தான் ‘அழ்ழாஹு அக்பர்’ எனக் கோஷமிட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

‘ஜெய்ஸ்ரீராம்’ எனக் கோஷமிட்டு தன்னை அங்கு வந்தவர்கள் அச்சுறுத்தியபோது, தனது அதிபரும் விரிவுரையாளர்களும் தனக்கு ஆதரவளித்து, தன்னை பாதுகாத்ததாகவும் முஸ்கான் குறிப்பிட்டார்.

தான் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஹிஜாப் மற்றும் புர்கா (முகத்தை மறைக்கும் துணி) ஆகியவற்றை அணிவதாகவும், வகுப்பறைக்குள் செல்லும் போது புர்காவை கழற்றிக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“ஹிஜாப் என்பது கல்லூரியின் ஆடைகளில் ஒன்றா? அது எப்போதும் அனுமதிக்கப்படுகிறதா?” என, அந்த மாணவியிடம் கேட்கப்பட்டபோது; “ஆமாம், ஹிஜாப் தொடர்பில் அதிபருக்கு ஆட்சேபனையில்லை, வெளியிலிருந்து வந்தவர்களே இந்தப் பிரச்சினையைக் கிளப்பினர்” என்றார் முஸ்கான்.

கேள்வி: “ஹிஜாப் அணிவதற்கு அங்கு தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால், நீங்கள் வேறு இடத்துக்கு படிக்கச் செல்வீர்களா?அல்லது எதிர்த்துப் போராடுவீர்களா?”

பதில்: “நாங்கள் தொடர்ந்தும் ஹிஜாப் அணிவோம். இது முஸ்லிம் பெண்களின் ஒரு பகுதியாகும். நான் தொடர்ந்தும் போராடுவேன்”.

கேள்வி: ஏனைய மதத்தவரிடமிருந்து, இந்து நண்பர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைத்ததா?

பதில்: ஆம் எமக்கு ஆரவு வழங்கினார்கள். இது உனது மதம், அதை நீ பின்பற்று என்று கூறினார்கள்.

கேள்வி: நீங்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறீர்களா?

பதில்: இல்லை, நான் பாதுகாப்பாக இருப்பதாகவே உணர்கிறேன். பொலிஸார் உள்ளிட்ட எல்லோரும் என்னிடம் வந்து; ‘நாங்கள் உன்னுடன் இருக்கிறோம், கவலைப்படாதே’ என்றார்கள்.

(மொழிபெயர்ப்பு: புதிது செய்தித்தளம்)

வீடியோ

மாணவி பீபி முஸ்கான் – ஹிஜாப் அணிந்து வந்த போது கிளம்பிய எதிர்ப்பு…

Comments

புதிது பேஸ்புக் பக்கம்