அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் பேராசிரியரானார் கலாநிதி சபீனா; தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சாதனை

🕔 February 2, 2022

– எம்.என்.எம். அப்ராஸ் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரகப் பணியாற்றும் கலாநிதி எம்.ஐ. சபீனா இம்தியாஸ், தாவரவியல் துறையில் பேராசிரியராக (Professor in Botany) பதவியுயர்வு பெற்றுள்ளார்.

23.12.2020ஆந் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1997ம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட உருவாக்கத்தின் ஆரம்ப காலத்தில், உதவி விரிவுரையாளராக பல்கலைக்கழக ஆசிரிய சேவையில்  இணைந்து கொண்ட இவர், 1998 ஆம் ஆண்டு நிரந்தர விரிவுரையாளர் நியமனம் கிடைக்கப் பெற்றார்.

தொடர்ந்து  சிரேஸ்ட விரிவுரையளர் தரம் II, தரம் I மற்றும் துறைத்தலைவர், கல்விசார் திணைக்களங்களின் தலைவர், இணைப்பாளர், மாணவர் ஆலோசகர், பணியாளர் மேம்பாட்டு திணைக்களத்தின் தலைவர் என பல்வேறுபட்ட பொறுப்புகள் மற்றும் பதவியுயர்வுகள் பெற்றதுடன், பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக தொடர்ச்சியாக 14.06.2010 முதல் 23.07.2016 வரை இருதடவை கடமையாற்றியுள்ளார்.

தனது கலாநிதி கற்கை நெறியில் தேர்ச்சி மிகு ஆய்வினை மேற்கொண்டமைக்காக, பேராதனை விவசாய பட்டப் பின் கற்கை நிறுவகத்தின் உயரிய விருதான சேர் ஜோன் கொத்தலாவல தங்கப் பதக்கத்தினை இவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இத்தகைய விருதுபெற்ற ஒரேயொருவர் இவரேயாவார்.

அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் கலாநிதியான இவர், தற்பொழுது அம்பாறை மாவட்டத்தின் முதல் பெண் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றிருப்பதும்  சிறப்பம்சமாகும்.

தாவரவியல் மற்றும் உயிரியல் விஞ்ஞானத்தில் பல்வேறு பட்ட சிறப்பு மிக்க ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை வெளியிட்டுள்ள இவர், அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் கல்வி சார் பயணங்களை மேற்கொண்டு அங்கும் தனது ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்