பசிலுக்கு பிரதமர் பதவி; 06 அமைச்சர்கள் மாறுகின்றனர்: ராஜாங்க அமைச்சர்கள் சிலருக்கு பதவி உயர்வு: விரைவில் மாற்றம்

🕔 January 3, 2022

மெரிக்காவிலிருந்து நேற்று முன்தினம் 01ஆம் திகதி நாடு திரும்பிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, விரைவில் தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ வகிக்கும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுவுள்ளதாக உள்ளக பிரசாரமொன்று மேற்கொள்ளப்படுவதாகவும், அவசர அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், சில அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென பசில் ராஜபக்ஷ வலியுறுத்தி வருகின்றார்.

குறைந்தபட்சம் 06 முக்கிய அமைச்சர்கள் மாற்றப்படவுள்ள அதேவேளை, சில ராஜாங்க அமைச்சர்கள் – அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாக பதவி உயர்வு பெறுவார்கள் என டெய்லி மிரர் அறிவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில ராஜாங்க அமைச்சுக்களின் கீழ் வரும் துறைகள் மாற்றப்படும் அதே வேளையில், சில ராஜாங்க அமைச்சுக்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன.

மேலும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர உள்ளிட்டோருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து பீ.பி. ஜயசுந்தர ஜனவரி 31ஆம் திகதியிலிருந்து விலகுவதற்கான ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசகராக ஜயசுந்தர நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மாதங்களில் பசில் பிரதமராக பதவியேற்க உள்ளதாக உள்ளக பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தற்போதுள்ள முழு அமைப்பும் மறுசீரமைக்கப்படும்.

சில அமைச்சுக்களுக்கு பசிலுடன் இணக்கமாக செயற்படக்கூடியவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்