சமூக அக்கறையற்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் பௌசர் சாடல்

🕔 December 15, 2021

யங்கரத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 07 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இளம் எழுத்தாளர் அஹ்னாப் ஜசீமுடைய விடுதலைக்காக குரல் எழுப்பும் ஆவணத்தில் இலங்கை பல்கலைக்கழகங்களிலுள்ள கல்வியாளர்கள் கையொப்பமிட்ட போதும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த எந்தக் கல்வியாளரும் குறித்த ஆவணத்தில், அஹ்னாப்புக்கு நீதி கோரி கையொப்பமிட முன் வரவில்லை என, எழுத்தாளரும் சிரேஷ்ட ஊடகவியாளருமான எம். பௌசர் தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூகம் என வரும் போது – மக்களுக்கு மட்டுமல்லாமல் அதன் மீதான நீதிக்காகவும் குரல் தர முன்வராத இவர்களின் கல்வியாலும், பட்டங்களாலும் பெறும் சமூகப் பயன்பாடும், பிரயோகமும்தான் என்ன? எனவும் அந்தப் பதிவில் பௌசர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பௌசர் தனது பேஸ்புக் பதிவில் மேலும் தெரிவிக்கையில்;

‘அநீதியாக கடந்த 2020 மே மாதத்திலிருந்து, அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 வயதான இளம் எழுத்தாளர் அஹ்னாப் ஜசீமுக்கு, இன்று புத்தளம் நீதிமன்றத்தில் பிணை கிடைத்திருக்கிறது.

அஹ்னாப் ஜெசீமின் விடுவிப்புக்காக துணிவுடன் வாதாடிய, அவரின் நலனுக்காக தொடர்ச்சியாக உழைத்த இளம் சட்டத்தரணிகளான சஞ்சய வில்சன் ஜெயசேகர, தேவ் தேவபாலன், சுவாஸ்திகா அருலிங்கம், ரஞ்சன் ரஞ்ச ஆகியோர் இந்த இடத்தில் அவர்களது துணிவானதும், இனம், மதம் கடந்த – நீதிக்கான, தன்னலமற்ற பணிக்காக மதிப்பிக்குரியவர்களாகிறார்கள்.

இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் ஆயிரக்கணக்கான சட்டத்தரணிகள் இருந்தும், இளம் எழுத்தாளர் அஹ்னாப் ஜசீமுக்கு போராட யாரும் முன் வரவில்லை.

இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் இவரின் விடுதலைக்காக குரல் எழுப்பும் ஆவணத்தில் கையொப்பமிட்ட போது, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த எந்தக் கல்வியாளருமே இந்த ஆவணத்தில், அஹ்னாப்புக்கு நீதி கோரி கையொப்பமிட முன் வரவில்லை.

சமூகம் என வரும் போது – அந்த மக்களுக்கு மட்டுமல்ல, அதன் மீதான நீதிக்காகவும் குரல் தர முன்வராத இவர்களது கல்வியாலும், பட்டங்களாலும் பெறும் சமூகப் பயன்பாடும், பிரயோகமும்தான் என்ன?’ எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்