அட்டாளைச்சேனை பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம்; மோசமான ஆவணப்படுத்தல்: எதிர்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சாடல்

🕔 December 6, 2021
தவிசாளர் ஏ.எல். அமானுல்லா

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக இன்று (06) நிறைவேறியது.

முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையின் கீழுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் இன்று சபை அமர்வு கூடியமையினை அடுத்து, அவர் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டனர். இறுதியில் ஏகமனதாக மேற்படி வரவு – செலவுத் திட்டம் நிறைவேறியது.

தவிசாளர் உட்பட 18 உறுப்பினர்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இன்றைய அமர்வுக்கு 02 உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை.

வேடிக்கையான அறிக்கை

வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கைகள் மிக மோசமாகத் தயாரிக்கப்பட்டு, சில தாள்களில் ஆவணப்பட்டுள்ளதாகவும், வரவு – செலவுத் திட்டம் தொடர்பான மதிப்பீடு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் 2021ஆம் ஆண்டுக்கான உண்மை செலவீனம், உண்மை வருமானம் காட்டப்படாமல் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை பாரிய குறைபாடாகும் என்றும்,தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். அஜ்மல் தனது உரையின் போது குற்றஞ்சாட்டினார்.

தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். அஜ்மல்

12 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை வருமானமாக ஈட்டும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு ஆவணமாக்கப்பட்டுள்ள முறையை வெளியாருக்குக் காட்டுவதற்கு வெட்கமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

இதே கருத்தை ஆளுந்தரப்பு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸ் முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமர்வில் அலட்சியம் காட்டிய உறுப்பினர்கள்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இன்றைய வரவு – செலவுத் திட்ட அமர்வு காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டபோதும், சில உறுப்பினர்கள் மிகவும் பிந்தியே சபைக்கு வருகை தந்தனர்.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.கே. கிதுறு முகம்மட், சபை அமர்வு ஆரம்பித்து அரை மணி நேரம் கடந்த பின்னரே வருகை தந்தார்.

அதேபோன்று சபை அமர்வு காலை 10.30க்கு தொடங்கிய நிலையில் 10.56க்கு வருகை தந்த முஸ்லிம் காங்கிரஸின் மற்றொரு உறுப்பினர் றியா மசூர் 11.15 மணியளவில் அமர்வை விட்டு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் றியா மசூர்

இவர் இன்றைய அமர்வில் எதுவும் பேசவில்லை என்பதோடு, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் சுமார் 04 வருட காலத்திலும், சில அமர்வுகளில் மட்டுமே இவர் பேசியுள்ளார் என்பதும், அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வுகளில் மிகவும் குறைவாக உரையாற்றியவர் இவர்தான் எனவும் தெரியவருகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் கீர்த்தி ரணசிங்க என்பவரும், அமர்வு ஆரம்பித்து சுமார் 01 மணித்தியாலம் கடந்த பின்னர், வரவு – செலவுத் திட்டத்துக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னரே – சபைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உத்தியோகத்தர்கள் அநீதியிழைக்கின்றனர்: ஜமீலா ஹமீட் குற்றச்சாட்டு

இன்றைய வரவு – செலவுத் திட்ட அமர்வில் உரையாற்றிய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜெமீலா ஹமீட்; தனக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபையிலுள்ள சில அதிகாரிகள் அநீதியிழைப்பதாக குற்றஞ்சாட்டினார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் உறுப்பினர்களுக்கான நிதி சமமாகப் பகிரப்படுவதாக இதன்போது கூறிய ஜெமீலா, அதற்காக தவிசாளருக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார்.

உறுப்பினர் ஜெமீலா ஹமீட்

பிரதேச சபையில் தனக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவு மையவாடியின் உடைந்த சுற்று மதிலை நிர்மாணித்தமை மற்றும் பூச்சுவேலை செய்தமைக்கான கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வதை இழுத்தடிக்கும் வகையில் அதிகாரியொருவர் நடந்து கொள்வதாகவும், இது தொடர்பாக தவிசாளரிடம் தான் முறையிட்டும், தனக்கான நியாயம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் இதன்போது ஜெமீலா ஹமீட் கூறினார்.

விளையாட்டு மைதானத்துக்குள் தனியார் கழிவுநீர்: சுட்டிக்காட்டிய உறுப்பினர் உவைஸ்

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குரிய பொது விளையாட்டு மைத்தானத்தினுள், அருகிலுள்ள தனியாரின் கழிவுநீர் விடப்படுவதாக இங்கு உரையாற்றிய உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸ் சுட்டிக்காட்டியதோடு, இதன் காரணமாக அண்மையில் அங்கு நடைபெற்ற மாகாண விளையாட்டுப் போட்டிகளின் போது, பங்குபற்றுநர்கள் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், திண்மக் கழிவகற்றல் செயற்பாடுகளில் பல பிரச்சினைகள் உள்ளன என்றும், சிலவேளைகளில் பொதுமக்கள் தமது வீட்டுக்கழிவுகளை வெளியில் எடுத்து வைத்தாலும், அவை உரிய நாட்களில் கொண்டுசெல்லப்படாமையினால் பல பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் முகம் கொடுக்க நேருவதாகவும் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு திண்மக் கழிவகற்றுதலுக்காக இரண்டு ‘ட்ராக்டர்’கள் (Tractors) புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ள போதிலும், கழிவகற்றலிலுள்ள பிரச்சினை இன்னும் தீரந்தபாடில்லை எனவும் உவைஸ் குறிப்பிட்டார்.

உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸ்

கணக்கறிக்கைக்கு எதிராக வாக்களிப்பு

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று நடத்தப்படுவதற்கு முன்னர், உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கறிக்கை ஆவணம் தொடர்பில் வாசித்து விளங்குவதற்காக கால அவகாசம் தேவை என, தேசிய காங்கிரஸ் உறுப்பினர் அஜ்மல் கோரியமைக்கு அமைய, இன்றைய அமர்வு – தேநீர் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் கூடியது.

இதன்போது பேசிய உறுப்பினர் அஜ்மல்; பிரதேச சபையினால் இரண்டு ‘ட்ராக்டர்’கள் (Tractors) புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்டமைக்கான செலவு தொடர்பில் தனக்கு சில சந்தேகங்கள் உள்ளதாகக் கூறினார்.

‘ட்ராக்டர்’கள் (Tractors) கொள்வனவுக்காக செலவிடப்பட்ட நிதியிலும் குறைந்த தொகைக்கு, அதே ‘டிராக்டர்’களை (Tractors) கொள்வனவு செய்ய முடியும் என தனது உரையில் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த தவிசாளர், குறித்த ‘ட்ராக்டர்’கள் (Tractors) அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்திலேயே கொள்வனவு செய்யப்பட்டதாகவும், அவர்கள் இதன்போது சில சலுகைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இருந்தபோதும், கணக்கறிக்கைக்கு எதிராக இதன்போது உறுப்பினர் அஜ்மல் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி

இன்றைய சபை அமர்வின் இறுதியில், கிண்ணியா – குறுஞ்சாக்கேணி படகு விபத்தில் பலியானவர்களுக்கு தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்தப்பட்டபோது…

தொடர்பான செய்தி: குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகள்: உறுப்பினர்கள் கண்டனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்