முஸ்லிம்களின் பூர்வீகம் ஆய்வு செய்யப்படாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகும்: முன்னாள் எம்.பி நௌசாத்

🕔 October 25, 2021

– நூருல் ஹுதா உமர் –

“பல நூறு வருட வரலாற்றைக் கொண்ட முஸ்லிங்களின் பூர்வீகம், அவர்களின் காணி, பொருளாதாரம் மற்றும் பௌதீக வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகவே பார்க்கிறேன்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.எம். நௌசாத் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தரை வாழ்த்தும் நிகழ்வு, சம்மாந்துறை ‘ஜனாதிபதி விளையாட்டரங்கில்’ மௌலவி ஏ.சி.ஏ. எம். புஹாரி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தவிசாளர் நௌசாத் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஒலுவிலில் அமைந்துள்ள இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் முஸ்லிங்களுக்கு மட்டுமான பல்கலைக்கழகமல்ல. அது போன்றே ஒரு தனி இனத்துக்கான பல்கலைக்கழகமுமல்ல.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைந்துள்ள இந்த பிரதேசங்களில் இனமுரண்பாடுகள் அதிகமாக உள்ளது. அதிலும் சம்மாந்துறையில் சற்று அதிகமாக உள்ளது.

அப்படியாயின் பல்கலைக்கழகம் தன்னுடைய சமூக பொறுப்பிலிருந்து வெளியேறியுள்ளதா என்று சிந்திக்க தோன்றுகிறது.

அங்கிருந்து பல்வேறு ஆய்வுகள் வெளியாகிக் கொண்டிருந்தாலும் பல நூறு வருட வரலாற்றை கொண்ட முஸ்லிங்களின் காணி, பூர்வீகம், பொருளாதாரம், பௌதிக வரலாறு என எதுவும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்பது, 25 வருட காலத்தை கொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் தவற விட்ட ஒரு குறையாகவே பார்க்கிறேன்.

முஸ்லிம் சமூகத்தை பற்றிய சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் உலமாக்களோ அல்லது அரசியல்வாதிகளோ விளக்கம் கூற முன்னர் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அது பற்றிய தெளிவை சக பெரும்பான்மை இன மாணவர்களுக்கு விளக்க முன்வரவேண்டும். இப்படியான சூழ்நிலையை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விச்சமூகம் செய்ய முன்வர வேண்டும்.

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மாணவர்களே உருவாக்க வல்லவர்கள். இப்படியான நிலையொன்றை புதிய உபவேந்தர் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

சமூக மாற்றங்களை கல்விமான்கள், புத்திஜீவிகள் நிறைந்த பல்கலைக்கழகங்களே உருவாக்க வேண்டும். இப்போதைய காலகட்டங்களில் பல்கலைக்கழகங்களுக்கும் சமூகத்திற்குமிடையிலான தொடர்பு குறைவாகவே காணப்படுகிறது.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் எங்கள் பிரதேசத்தில் அமைந்துள்ள சமூக நல கல்விக்கூடம் என்று பெருமைப்படும் நிலை எதிர்காலத்தில் உருவாகவேண்டும்” என்றார்.

Comments